13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்காக நாளைமறுதினம் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன் வடக்கின் தமிழ் கட்சிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது குறித்த தமது முன்மொழிவை அவர் வழங்கியிருந்தார்.
என்றாலும், ஜனாதிபதியின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்தை நிராகரிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களை மரியாதையாக வாழ வைப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க எடுப்பாரென நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதேபோன்று நாடு திரும்பியதும் அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ் கட்சிகளுடன் விரிவான கலந்துரையாடலை நடத்துவதாக ஜனாதிபதியும் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்புலத்திலேயே நாளைமறுதினம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் வடக்கின் தமிழ் கட்சிகள், மலையக கட்சிகள் உட்பட நாட்டின் ஏனைய பிரதான கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.