எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வெளிநாட்டுத் தூதர்கள் பேச்சு! – முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு

0
81
Article Top Ad

12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் நேற்று (25) மாலை நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விசேட விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், அரசமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அரசின் ஜனநாயகத்தின் அப்பட்டமான மீறல் போலவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசின் திறமையின்மை, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தாதது மற்றும் சட்டத்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர், நெதர்லாந்தின் தூதுவர், இந்தியத் தூதுவர், நியூசிலாந்து தூதுவர், ஆஸ்திரேலியாத் தூதுவர், பிரான்ஸ் தூதுவர், கனேடிய உயர்ஸ்தானிகர், ஐக்கிய இராச்சியத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகர், ரோமானியத் தூதுவர், ஜப்பானிய பிரதித் தூதுக்குழுவின் பிரதானி, இத்தாலிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி, ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பிரிவின் உறுப்பினர் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சியைப பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் முன்னிலையில் உரையாற்றியதுடன் நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளன என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் சுகாதாரத்துறை எவ்வாறு சீர்குலைந்துள்ளது மற்றும் தரமற்ற மருந்துகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் நினைவு கூர்ந்தார்.

ஊழலுக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றாலும், ஊழல், மோசடிகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை என்றும், சட்டத்துறையில் பல சிக்கல்கள் உள்ளன என்றும், சகல சட்டமூலங்களிலும் குறைபாடுகள் உள்ளன என்றும், இதனால் சட்டத்துறைக் கட்டமைப்பின் தரம் குறைந்துள்ளது என்றும் இங்கிருந்த தூதுவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எடுத்துரைத்தார்.
………..