பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கைக்கு விஜயம் – சீனா கழுகுப்பார்வை!

0
55
Article Top Ad

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பசிபிக் பிராந்தியத்தில் “புதிய ஏகாதிபத்தியம்“ உருவாகி வருவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூ கலிடோனியா, பப்புவா நிவ் கினியா, வனுவாட்டு குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கடந்த 24ஆம் திகதிமுதல் உத்தியோகப்பூர்வ அரசுமுறை விஜயங்களை  மேற்கொண்டுள்ளார்.

பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நிவ் கினியாவில் அரச தலைவருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட இம்மானுவேல் மேக்ரான்,
வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில்  பசுபிக் பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தல்களை சீனா மேற்கொண்டுவருகிறது. சீனாவின் இந்த எதேசியதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இந்த “புதிய ஏகாதிபத்தியத்திற்கு” எதிராக பிராந்திய நாடுகள் கைகோர்த்து செயல்பட வேண்டும்” என்றார்.

வனுவாட்டுவில் அவர் ஆற்றிய உரையில், “பிரான்ஸ் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் “தோளோடு தோள்” நின்று பணியாற்றும்.

இந்தோ-பசிபிக் பகுதியில், குறிப்பாக ஓசியானியாவில், புதிய ஏகாதிபத்தியம் தோன்றுகிறது. பல நாடுகளை அச்சுறுத்தும் இந்த ஏகாதிபத்தியத்தை வளர்ச்சியடையவிடக் கூடாது. ஏனைய நாடுகளின் இறையாண்மைக்கும் இது அச்சுறுத்தலாகும்.

பெரும் வல்லரசுகளின் கொள்ளையடிப்பால் பசுபிக் நாடுகளின் வளங்கள் சுரண்டப்படுவதுடன், வெளிநாட்டுக் கப்பல்கள் இங்கு சட்டவிரோதமாக கடல்வளங்களை சுரண்டுகின்றன“ என்றார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருதாக அமெரிக்கா தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் சூழலில் பிரான்ஸ் ஜனாதிபதியும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இவ்வாறு தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

பசுபிக் பிராந்திய நாடுகளுடன் கடந்தகாலத்தில் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சீனா மீண்டும் அங்கு தூதரக உறவுகளை புதுபிக்க நடவடிக்கைகள் எடுத்துவரும் பின்புலத்தில் இம்மானுவேல் மேக்ரான்னின் உரையானது சீனாவை கடும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

சுதந்திர பிரெஞ்சுப் படையின் தலைவர் சார்லஸ் டி கோல்க்குப் பிறகு பசிபிக் தீவுகளின் நாடுகளில் கால் பதித்த பிரான்ஸின் முதல் ஜனாதிபதி மக்ரோன், நாளை இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை என்பது சீனாவுடன் நெருங்கிய நட்பை பேணும் நாடாகும். ஆனால், சீனாவுக்கு எதிரான கருத்துகளை கடுமையான தொனியில் வெளியிட்டுள்ள பின்புலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை இம்மானுவேல் மேக்ரான் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிகத்தை மேற்குலக நாடுகள் எதிர்ப்பது போல் இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது.

இலங்கை எப்போதும் சீனாவின் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்நிலையில், சீனாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ள பின்புலத்தில இம்மானுவேல் மேக்ரான், இலங்கை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளும் சந்திப்பு  சர்வதேச ரீதியில் மிகவும் அவதானமிக்கதாக மாறியுள்ளது.

இலங்கையிலும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜனாதிபதி மக்ரோன், வெளியிடுவாரா என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளது போல் இவருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து சீனாவும்  கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.