சீனாவின் இராணுவ மற்றும் கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 அதிகாரிகள் வருகைதந்துள்ளதுடன், இந்த இராணுவ மற்றும் கடற்படை கப்பலுக்கு இராணுவக் கட்டளை தளபதி ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
சீனாவின் இந்த இராணுவக் கப்பல் கொழும்புக்கு வருகைந்தந்தமை சம்பிரதாயப்பூர்வமான பயணம் என கடற்படை கூறியுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துவைக்கப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 சீனாவின் கடற்படை கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.
யுவான் வாங் 5 (Yuan Wang 5 ) இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த போது இலங்கை கடற்படையால் குறித்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்றும் அளிக்கப்பட்டது.
இது இந்தியாவை பெரும் கவலைக்கு உட்படுத்தியிருந்ததுடன், இந்தியாவை உளவுபார்க்கும் நோக்கிலேயே குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துவைக்கப்பட்டதாகவும் இந்தியா குற்றம் சுமத்தியது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவருதாக சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் பனிபோர் நிலவிரும் பின்புலத்திலேயே ஓராண்டுக்குள் சீனாவின் இரண்டாவது இராணுவ கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய பயணத்தின் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவடைந்து வருவதுடன், இலங்கையில் இந்தியா அதிக முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இந்தியாவுடனான உறவு வலுவடைந்துவரும் பின்புலத்திலேயே சீனாவின் இராணுவக் கப்பல் இம்முறை நேரடியாக கொழும்புத் துறைமுகத்திற்கே வருகைத்தந்துள்ளது.
சீன இராணுவ மற்றும் கடற்படை கப்பலின் இந்த வருகையை இந்தியா மாத்திரமல்ல இலங்கையில் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் அவதானம் செலுத்தவைத்துள்ளது.