கொழும்பு வந்த சீன போர்க் கப்பலை மிகத் தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

0
47
Article Top Ad

சீன போர்க் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த நிலையில், குறித்த கப்பலை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்; நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் இந்தியா கவனமாக கண்காணிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு போர்க் கப்பலா இல்லையா என்பது தெரியவில்லை. இந்த அறிக்கைகளைப் பார்த்தபின், நாட்டின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்பதை நான் வலியுறுத்துகிறேன்” என பாக்சி தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சீன போர்க் கப்பலான HAI YANG 24 HAO ஆகஸ்ட் 10 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த நிலையில், இன்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

இது கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த இரண்டாது சீன போர் கப்பல் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவான் வாங் 5 என்ற உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்தது.

இந்தக் கப்பலின் வருகை இந்தியா, இலங்கை உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவும் குறித்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியிருந்தது.

விண்வெளியில் உள்ள பொருட்களை கண்காணிப்பதற்கான உயர் தொழில்நுட்பக் கப்பல் என ஆய்வாளர்கள் வர்ணிக்கும் யுவான் வாங் 5 இன் வருகையை இந்தியா எதிர்த்தது.

ஏனெனில் ஆசியா-ஐரோப்பாவின் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ள துறைமுகத்தை சீனா இராணுவ தளமாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

சீன போர்க்கப்பலின் வருகையால் இந்தியா கவலை – தடுத்து நிறுத்த முற்பட்ட முயற்சியும் தோல்வி
மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ஆகஸ்ட் 11 முதல் ஹம்பாந்தோட்டையில் ஐந்து நாட்கள் தரித்து நிற்பதற்கு கப்பலுக்கு அனுமதி வழங்கியது.

இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் போது கப்பலின் கண்காணிப்பு அமைப்புகள் இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைக்க முயற்சிக்கும் சாத்தியம் குறித்து புது டில்லியில் அச்சம் நிலவியது.

எவ்வாறாயினும், கணிசமான காலதாமதத்திற்குப் பிறகு, சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட மூலோபாய தெற்கு துறைமுகமான ஹம்பாந்தோட்டையில் கப்பலை நிறுத்த இலங்கை அனுமதித்திருந்தது.

இதனிடையே, சீன இராணுவம் இலங்கையில் இரண்டாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை நிர்மாணிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குறிவைத்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு வந்த சீன போர்க் கப்பல் : மிகத் தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
கொழும்பில் தரித்து நிறுத்தப்பட்ட சீன போர் கப்பல்: இந்திய – சீன பனிபோர் பின்புலமா?
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ஏற்கனவே 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருப்பதன் காரணங்களுக்காக இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த இடமாக இருக்கலாம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா தனது அடுத்த வெளிநாட்டு இராணுவத் தளத்தை உருவாக்கக்கூடிய எட்டு சர்வதேச துறைமுகங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற அரசியல் ஆட்சி சீனாவுக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும், இதன் மூலம் ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் சக்தி விரிவாக்கத்திற்கான தளத்தை சீனா உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, HAI YANG 24 HAO என்ற போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த நிலையில், அது குறித்து இந்தியா தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.