இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த திருகோணமலைமீது ஆழமான பார்வையை செலுத்தியுள்ள இந்தியா

0
57
Article Top Ad

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2022ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இது திருகோணமலை துறைமுகம் மற்றும் பிராந்தியத்தை எரிசக்தி மையமாக மாற்றுவதற்கான ஒரு பாரிய திட்டமாகும்.

இந்த துறைமுகம் இலங்கையின் முக்கிய வளங்களில் ஒன்றாகவுள்ளதுடன், இது உலகின் புவிசார் மூலோபாயத்தின் நான்காவது பெரிய இயற்கை ஆழ்கடல் துறைமுகமாகவும் உள்ளது. பல தசாப்தங்களாக புதுடெல்லி இத்துறைமுகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வந்தது.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் (ISLA), திருகோணமலை அல்லது இலங்கையில் உள்ள வேறு எந்த துறைமுகமும் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நாட்டினதும் இராணுவ பயன்பாட்டிற்கு வழங்கப்படாதென உறுதிமொழிகள் வழங்கப்பட்டதுடன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகியோருக்கு இடையே கடிதங்களும் பரிமாறப்பட்டன.

இராஜதந்திர இணக்கப்பாடுகள் தோல்வியடைந்தால் ஆயுதம் ஏந்திய தலையீட்டை இந்தியா பரிசீலிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டில், இலங்கையின் உயர் நீதிமன்றம், ஒரு சில மனுக்களை விசாரித்த பின்னர், கிழக்கு மாகாணத்தை வடக்கு-கிழக்கு மாகாண சபையிலிருந்து பிரித்தது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வருட கால இடைவெளியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை செயல்படுத்தப்படாமையால் உயர்நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியிருந்தது.

1990 களில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தெற்கில் சம்பூரில் இருந்து வடக்கே திருகோணமலை துறைமுகம் வரையான பகுதிவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்த துறைமுகம் 40-மீ ஆழம் கொண்டதுடன் இங்கு போர்க்கப்பல்கள், விமானம் தாங்கிகள் மற்றும் பெரிய வணிகக் கப்பல்களை தரித்து நிறுத்த முடியும்.

சிங்கப்பூர் திருகோணமலையில் ஒரு கோதுமை மா ஆலையை வைத்துள்ளது. ஆனால், முக்கிய வளமாக இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட 99 எண்ணெய் குதங்களை குறிப்பிட முடியும்.

இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் 30 மாதங்கள் தங்கியிருந்த போது, கடல் வழியாக இங்கு தளப்பாடங்களையும் கொண்டுவந்திருந்தது.

பிரித்தானியாவிடமிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது திருகோணமலை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இலங்கைக்கு மாற்ற தயக்கம் காட்டியது. என்றாலும், 1957இல் கடற்படை தளத்தையும் எண்ணெய் குதங்களை இலங்கையிடம் திரும்ப ஒப்படைத்தது.

முதலில் அமெரிக்காவையும் பின்னர் சிங்கப்பூரையும் அழைத்து எண்ணெய் குதங்களை புதுபிக்க இலங்கை முயற்சித்தது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை.

சீனா, ஜப்பான் உட்பட பல நாடுகள் திருகோணமலையில் தமது திட்டங்களை முன்னெடுக்கும் நகர்வுகளில் ஈடுபட்டிருந்த போதிலும் இந்தியாவின் ஆதிக்கத்தால் அங்கு எந்தவொரு நாட்டாலும் ஆதிக்கம் செலுத்த முடியும்.

அமெரிக்காவின் கடற்படை தளமொன்றுக்கூட அங்கு அமைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடந்தகாலத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர். ஆனால், இந்தியா எதிர்பார்த்தது போன்று திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்களில் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.

திருகோணமலையை மையப்படுத்தி பரந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இந்தியா எதிர்பார்த்துள்ளது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்துக்கான நேரடி விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

பூகோள ரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் இந்த துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் அதன்மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளில் பல வல்லரசு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இந்தியாவை தாண்டி எந்தவொரு நாட்டாலும் திருமலையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இந்தியாவிற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் புதிய திட்டமான திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியின் ஊடாக இலங்கையில் தனது கோட்டையை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் உறவுகளை இறுக்கமாக மேம்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு உதவும்.

திருகோணமலையை “தொழில்துறை துறைமுகமாக” அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான விலைமனுகோரலை வெளியிட உள்ளதாகவும் இலங்கை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

திருகோணமலையில் கைத்தொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டை பெற்று விசேட பொருளாதார வலயம், கைத்தொழில் பூங்கா அல்லது எரிசக்தி மையம் என்பனவற்றின் மூலம் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்வது இலங்கையின் நீண்டகால திட்டமாகும்.

இந்தியா ஏற்கனவே திருகோணமலையில் கணிசமான முதலீட்டை செய்துள்ளது. மற்றும் இது இந்தியாவிற்கு மூலோபாய ரீதியாக உதவியாக இருக்கும் என்பதால் பாரிய முதலீடுகளை செய்ய வாய்ப்புள்ளது. இந்தியாவைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் புவிசார் அரசியல் நலன்களை தூண்டி வருகிறது.

திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியானது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மீது இந்தியா தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த துறைமுகமானது ஆசியாவின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்று மட்டுமல்ல, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

இது பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தக வழிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்த உதவும், ஏனெனில் இது கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்திற்கும் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சரக்குகளுக்கு வழிவகுக்கும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவுக்கான முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் இந்திய-இலங்கை உறவுகள் மோசமடைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

சீன “கடன்-பொறி” இராஜதந்திரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றாலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு மூலோபாய இடத்தில் சீன இருப்பை உறுதி செய்ததால், இந்தியாவிற்கு அது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறியது.

கடனை அடைக்க முடியாத நிலையில், துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 வருட குத்தகைக்கு சீன வசம் இலங்கை ஒப்படைத்தது இந்தியாவின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்தியாவின் கரையில் இருந்து சில நூறு மைல்களுக்கு அப்பால் கால் பதித்த சீனாவிற்கு இது மூலோபாய ரீதியாக முக்கியமானதாக இருந்தது.

திருகோணமலை துறைமுகம் என்ற பெயரில், இந்தியாவுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து சீனாவைத் தூக்கி எறிவதற்கு இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

அதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பாரிய முதலீடுகளை திருகோணமலையை மையப்படுத்தி இந்தியா மேற்கொள்ளவுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் இந்தியாவின் தலையீடு மிகவும் அழுத்தமாக இருந்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(சு.நிஷாந்தன்)