இலங்கையின் அரசு தொலைக்காட்சியான “சேனல் ஐ“ அலைவரிசையை பிரபல சர்வதேச நிறுவனமான “லைகா“ நிறுவனம் குத்தகைக்கு வாங்கியுள்ளதாக வெளியான செய்திகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“சேனல் ஐ“ அலைவரிசையை லைகா நிறுவனத்துக்கு வழங்கும் எவ்வித யோசனையும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
“சேனல் ஐ“ அலைவரிசை பிரபல வர்த்தக நிறுவனமான லைகாவுக்கு அரசாங்கம் குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக இலங்கையின் முன்னணி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டு வந்ததுடன், நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையும் நிராகரிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டன.
நீண்டகால குத்தகை அடிப்படையில் “சேனல் ஐ“ அலைவரிசை இவ்வாறு லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படுவதாகவும் நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களை லைகாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
“சேனல் ஐ“ தொலைக்காட்சியை விற்பனை செய்யவோ அல்லது குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கோ எவ்வித யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் “சேனல் ஐ“ தொலைக்காட்சி சேவை வருமானம் இல்லாமையினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதுடன், அதனை நடாத்தி செல்வதும் கடினமானதாக உள்ளது.
மின்சார கட்டணத்தை செலுத்துவதில் கூட சிரமமான நிலைமை காணப்படுகின்றது. மிகவும் நட்டத்தில் இயங்குகின்ற “சேனல் ஐ“ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குறுகிய கால குத்தகை அடிப்படையில் வழங்க ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் எனது அனுமதியுடன் அதனை குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.
மாதமொன்றிற்கு 25 மில்லியன் ரூபா இதன்மூலம் வருமானம் கிடைக்கும். ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு வணிக ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமமானது, நிறுவனத்தின் சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களை ஒளிபரப்பும் நேரம் மாத்திரமே லைகா நிறுவனத்துக்கு இவ்வாறு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் எவ்வித அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன், அமைச்சரவையில் எந்த நிராகரிப்புகளும் இடம்பெறவில்லை. இது ஒரு போலியான செய்தியாகும்” என்றார்.