சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்களை ஜோர்தான் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த ஏழு இலங்கையர்களும் நேற்றைய தினம் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை ஜோர்தான் எல்லை பாதுகாப்பு இராணுவத்தினர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜோர்டான்-இஸ்ரேல் எல்லையானது, பல ஆண்டுகளாக ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வேலை தேடி வருபவர்களுக்கு சிக்கல் நிறைந்த எல்லையாகவே உள்ளது.
இந்த எல்லைப்பகுதிகளில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்படுபவர்களை ஜோர்தான் இராணுவத்தினர் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்துள்ளதுடன்,இந்த ஆண்டின் காலாண்டில் மாத்திரம் இதுவரை 23 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.