இந்தியா-இலங்கை மின் இணைப்புத் திட்டம்; பேச்சுவார்த்தைக்கும் மேம்பட்ட கட்டத்தில்

0
84
Article Top Ad

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் மின் இணைப்புத் திட்டம் பேச்சுவார்த்தைக்கும் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ளதாக விரைவில் இத்திட்டம் தொடர்பிலான மதிப்பாய்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது பேச்சுவார்த்தையின் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) முடிக்கப்பட்டு, முறையான ஒப்புதலுக்கு முன் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாதம் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றிறை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது மின் இணைப்புத் திட்டம் தொடர்பில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

“இரு நாடுகளுக்கு இடையேயான மின் இணைப்புகளை இணைக்கும் பணியை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இலங்கை – இந்தியா இடையே மின் இணைப்புத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இடம்பெற்று வருகிறது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பிஜிசிஐ) (Power Grid Corporation of India (PGCI) திட்டத்திற்கான முதற்கட்ட அறிக்கையை தயாரித்துள்ளதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. மின் இணைப்பு கேபிள்கள் கடலுக்கு மேலாகவே பொறுத்தப்பட இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில், இரு நாடுகளும் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின் இணைப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திருந்தன. என்றாலும், செலவுகள் அதிகமாக இருந்தமையினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை பரவலான மின் பற்றாக்குறையைக் சந்தித்துவருவதால் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்த இத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்தியாவில் நாட்டின் வடக்கிலிருந்து தெற்கிற்கும், கிழக்கிலிருந்து மேற்கிற்கும் இயங்கும் மிகவும் வலுவான மின் இணைப்புத்திட்டம் உள்ளது.

இந்தத் திட்டமானது இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்குமென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அத்துடன், இலங்கையின் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணைக்கப்படும் மின்சாரக் கட்டமைப்பால் அந்நாடுகளில் தொழில்துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என கூறியுள்ள இந்திய மின்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் அஜய் திவாரி, அந்த இணைப்பை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் விரிவுபடுத்தி, ஒரு ஒருங்கிணைந்த சந்தையாக உருவாக்க இந்தியா விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

தெற்காசிய மின் இணைப்பு சந்தையை விரிவாக்க விரும்பும் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற அண்டை நாடுகளுடன் மின் இணைப்பை நிறுவியுள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஒரு முத்தரப்பு மின் வர்த்தக ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதுடன், நேபாளத்தின் ஊடாக இந்தியா மின் இணைப்பை பங்களாதேஷுக்கு விற்க எதிர்பார்த்துள்ளது.