தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றும் அரசாங்கம் திட்டம்

0
81
Article Top Ad

அரசியல் ரீதியாக தற்போது செயலிழந்துள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் மற்றும் பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட முடியும் வகையில் புதிய வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர்கள் மற்றும் மாகாணங்களின் தலைமை செயலாளர் கலந்துக்கொண்ட இந்த கலந்துரையாடலில், அடுத்தாண்டு இறுதி வரையில் பாராளுமன்றம் இயங்கும் என்பதால், கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் விவகாரங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொள்ளக்கூடிய வகையிலான வேலைத்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, ஆளுநர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய வகையில் விசேட ஆலோசனை தெரிவுக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி சபைகளின் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வேலைத்திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி ஒரு மாத காலத்திற்குள் வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் மத்திய அரசு,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஏற்படும் நிதி விரயத்தை குறைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.