ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

0
48
Article Top Ad

ஐக்கிய அரபு அமீரகதிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் நியூசிலாந்து அணி விளையாடியது.

கடந்த 17ம் திகதி டுபாயில் நடைபெற்ற முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதனை தொடர்ந்து கடந்த 19ம் திகதி நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடர் 1-1 என சமநிலையடைந்தது.

தொடர்ந்து நேற்றைய தினம் (20) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது.

அதற்கமைய நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி , 20 ஓவர்களின் நிறைவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில், துடுப்பாட்டத்தில் வில் யங் (Will Young) 56 ஓட்டங்களையும் மார்க் சாப்மேன் Mark (Chapman) 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில், ஜுனைத் சித்திக் (Junaid Siddique) மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

167 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களின் நிறைவில் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில், அயன் அப்சல் கான் (Aayan Afzal Khan) 42 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில், பென் லிஸ்டர் (Ben Lister) மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.