இலங்கையில் ஐ.எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளதாக தகவல்

0
33
Article Top Ad

ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற 25 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இதுபோன்ற கருத்துகளை கூறியிருப்பது இலங்கையில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு – குருந்தூர் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இலங்கையில் இனக் கலவரங்கள் ஏற்படலாம் என இந்திய புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த பின்னணியில் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளும் இலங்கையில் ஊடுறுவி இருப்பதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என்று இலங்கையின் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்துக்காக செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றதா என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இவ்வாறு வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் பலரும் பேசியுள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்து வெளியிடுகையில், மலையக மக்கள் வசிக்கும் தோட்டங்களில் குடியிருந்த குடும்பம் அடாவடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்புக்கு சென்ற சர்வமதத் தலைவர்கள் குழுவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறுந்தூர் மலை பௌத்தர்களுக்கா, இந்துக்களுக்கா சொந்தம் என்று முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இப்படியிருக்கும்போது, ஐ.எஸ். ஐ.எஸ் உறுப்பினர்கள் இலங்கையில் ஊடுறுவியிருப்பதாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில் நாட்டுக்கு எப்படி சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் வருவார்கள்? இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, உரையாற்றுகையில், “இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் ஊடுறுவி இருப்பதாக ஆளுங்கட்சி எம்.பி கூறியிருக்கும் கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அந்த 25 பேர் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.