அரசாங்கத்தின் முக்கிய கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் தமக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லையென ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற எம்.பிகள் பிரதமரிடம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதுடன், இந்நிலைமை தொடர்ந்தால் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பாடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் தம்மை புறக்கணிப்பதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் விசேட சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன, இவர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டமொன்றிலேயே பின்வரிசை எம்.பிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சில அமைச்சர்கள், சில மாகாணசபை ஆளுநர்கள், மாகாணச் செயலாளர்கள், அரசாங்க உறுப்பினர்கள் தமது கருத்துகளை கேட்காது செயற்பட்டவதாக இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் ஏனைய சில முக்கிய செயல்பாடுகளில் அரசாங்க அதிகாரிகள் தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸ குட்டியாராச்சி, சமன்பிரிய ஹேரத், ஜயந்த கட்டகொட, மிலன் ஜயதிலக்க, டி.வீரசிங்க போன்ற எம்.பி.க்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான பியால் நிஷாந்த, சாமர சம்பத் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தமக்கு உரிய கௌரவத்தை வழங்காவிடின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பில் அதனை எதிர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகளாம் என்றும் அவர்கள் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவர்களது குற்றச்சாட்டுகளை கவனமாக செவிமடுத்த பிரதமர் தினேஷ் குணவர்தன, ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து செயற்படுமாறு ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் பின்வரிசை எம்.பிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.