பைடனுடனான சந்திப்பை தவிர்த்த புடின் ; சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் இந்தியா

0
43
Article Top Ad

இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் 10 திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்முறை ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதுடன், உச்சிமாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனப் பிரதமர் சி ஜின் பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவப் பதவிக்கு ரஷ்யாவின் ஆதரவுக்காக புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

பின்னர், டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அப்போது, ஜி20 மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியாது என்றும் ரஷ்ய பிரதிநிதியாக வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் மோடியிடம் புடின் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் உடனான ரஷ்யாவின் போருக்கு எதிராக அமெரிக்கா குரல்கொடுத்துவரும் பின்புலத்தில் இந்தச் சந்திப்பு உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்பட்டது. ஆனால், சந்திப்பை தவிர்த்துக்கொள்ளும் வகையில் வெளியாகியுள்ள புடினின் அறிவிப்பானது அமெரிக்காவுடன் ரஷ்யா பேசுவதற்கு தயார் இல்லை என்பதையே மறைமுகமாக உலகத்துக்கு ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இம்முறை ஜி 20 மாநாட்டில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பனிபோர் மற்றும் தென் சீனக் கடல், இந்திய பெருங்கடல் விவகாரங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளை தென் சீனக் கடலையும் உள்ளடக்கி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஜி 20 நாட்டில் சீன ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி எதிர்ப்பை வெளியிட வேண்டுமெனவும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது.

டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின் பிங்க் வருகை தருகிறார். அவருக்கு விருந்தளிப்பதை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.