இந்திய கடற்படையின் ‘INS Delhi’ எனும் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் உத்தியோகபூர்வ பிரவேசமாக நேற்றைய தினம் (01) நாட்டை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பளித்துள்ளனர்.
இந்த நிலையில், கப்பலின் கேப்டன் அபிஷேக் குமார் மற்றும் மேற்கு கடற்படைத்த கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
‘INS Delhi’ என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்குரமிட்டுள்ள காலப்பகுதியில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலில் வருகைதந்த அனைத்து இந்திய கடற்படையினரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் முக்கியமான இடங்களை பார்வையிடும் வகையில் குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ‘INS Delhi’ கப்பலை பார்வையிடுவதற்கும் பயிற்சி நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘INS Delhi’ கப்பலானது எதிர்வரும் 03 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படும் நேரத்தில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.