சீனா தனது வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிரதேசங்களை உள்ளடக்கியிருப்பதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என இந்தியா கூறியுள்ளது.
சீனாவின் வரைப்படத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.அவை ஆதாரமற்றவை எனவும் கூறியுளள்ளது.
சீனாவின் இந்த செயலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ‘வெறும் அபத்தமான கூற்றுக்களால், ஏனைய நாடுகளின் நிலப்பகுதிகள் சீனாவுக்கு சொந்தமாக்காது என தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ்
சீனாவின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் கடும் கோபத்தில் உள்ளது.
சீனாவின் இயற்கை வள அமைச்சகம் சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது. தென் சீனக் கடலில் சீனா தனது எல்லைகளைக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதிகள் மீதான தனது இறையாண்மை மற்றும் அதிகார வரம்பை சட்டப்பூர்வமாக்க சீனாவின் புதிய முயற்சிகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மா தெரசிதா தாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சீனாவின் நடத்தைக்கு பிலிப்பைன்ஸ் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டிருந்த தேசிய வரைபடத்தை பிலிப்பைன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இதில் கலயான் தீவுகள் மற்றும் ஸ்ப்ராட்லிஸின் சில பகுதிகளை சீனா தனது தேசிய எல்லைகளாகக் காட்டியிருந்தது.
மலேசியா
சீனாவின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தில் தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரலுக்கு எதிராக எழுத்துப்பூர்வக் குறிப்பை அனுப்புவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலேசியா தனது வரைபடத்தில் பிராந்திய நீரையும் உள்ளடக்கியதாகக் காட்டுவதை ஆட்சேபிப்பதாக சீனா கூறுகிறது. தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரலை மலேசியா அங்கீகரிக்கவில்லை என மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வரைபடத்தில் வியட்நாம்
வியட்நாமும் சீனாவின் தவறான செயல்களால் சீற்றமடைந்துள்ளது. Hoang Sa (Paracel) மற்றும் Truong Sa (Spratly) தீவுகள் மீது வியட்நாம் தனது இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சீனாவின் கடல்சார் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிப்பதாக வியட்நாமின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Pham Thu Hong கூறியுள்ளார்.
தாய்வான்
தாய்வான் வெளிவிவகார அமைச்சும் சீனாவின் புதிய வரைபடத்தை விமர்சித்துள்ளது. தாய்வான் ஒரு போதும் சீனாவால் ஆளப்படவில்லை.
இதனிடையே தனது இந்த புதிய வரைபடம் தொடர்பல் பின்வாங்க முடியாது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.