ஆதவனை நோக்கி ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 : பின்னணியில் இருக்கும் பெண் திட்ட இயக்குனர்

0
76
Article Top Ad

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் மொத்தம் ஏழு ஆய்வுக் கருவிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் நான்கு ஆய்வுக் கருவிகள் சூரியனை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். மீதமுள்ள மூன்று கருவிகள், லெக்ராஞ்சியன்1-ஐ சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மூலம் சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் 125 நாட்களில் குறித்த இலக்கை அடையவுள்ளது.

அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பிய அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு தனியிடம் கிடைக்கும்.

நிலவின் தென்துருவத்தை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று (02) வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளனர்.

தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆதித்யா எல்-1 இன் விண்கல திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி என்பவர் விளங்குகிறார்.

இவர் ஒரு தென்காசி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பாடசாலையில் பயின்ற இவர் உயர் தரத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் நெல்லையில் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து, மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்ற பின்னர் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

இவரது கணவர் ஷாஜகான், துபாயில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் . இவர்களின் மகன் முகம்மது தாரிக், நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக உள்ள நிலையில் மகள் தஸ்நீம் பெங்களூரில் கல்வி கற்று வருகிறார்.

ஆதித்யா எல்-1 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் நான்காவது நாடாக இந்தியா சாதனை புரியும்

இதேவேளை, இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சியை பாராட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ ‘x’ வலைத்தளம் ஊடாக பதிவொன்றின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில்,

” சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.

இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா -L1 இன் வெற்றிகரமான ஏவுதலுக்காக நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும். ” என குறிப்பிடப்பட்டிருந்தது.

After the success of Chandrayaan-3, India continues its space journey.

Congratulations to our scientists and engineers at @isro for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.

Our tireless scientific efforts will continue in order to develop better…

— Narendra Modi (@narendramodi) September 2, 2023
மேலும், இஸ்ரோ மூலம் விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 இன் திட்டப் பணிகள் முழுவதும் முத்தையா வனிதா, ரிது காரிதால் என்ற பெண்களின் தலைமையில் நடைபெற்றமை வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

இதில், முத்தையா வனிதா இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், கடந்த 2006ஆம் ஆண்டின் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.