“செனல்-4“ வின் காணொளியை நிராகரித்த பிள்ளையான்

0
34
Article Top Ad

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திறை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் நிராகரித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் நடந்ததை போன்றதொரு சூழலை உருவாக்க முற்படுகின்றனரா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

“என்னுடன் இணைந்து பயணித்திருந்த அசாத் மௌலானா, வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளதால், அவரது புகலிட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

எமது அமைப்பில் இயங்க முடியாது, தமது பிணக்குகளுக்கு தீர்வுகாண குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வேண்டுமென கூறி அவர் விலகிசென்று ஒருவருடகாலம் கடந்துள்ளது.

செனல்-4 வெளியிட்டுள்ள இந்த காணொளி பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. செனல்-4 தொலைக்காட்சி கடந்தகாலத்தில் எமது நாட்டுக்கு என்ன செய்தது என நன்றாகத் தெரியும்.

அந்த ஊடகத்தில் வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. கடந்தகாலத்தில் பல ஊடகங்களால் நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த உயரிய சபையில் எனது பெயரை பயன்படுத்தியதுடன், கருத்துகளையும் வெளியிட்டிருந்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனை பாரிய பிரச்சினையாக தோற்றுவித்திருந்தனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல்களால் நாட்டில் இரத்த ஆறு ஓடியதுடன், கிழக்கு மாகாண மக்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்புதான் மேற்கொண்டதாக அந்த அமைப்பின் மறைந்த தலைவர் அல் பக்தாதி தெரிவித்திருந்தார். ஐ.எஸ். அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான “அமாத்“ என்ற இணையத்தளத்திலும் தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.

எதற்காக செய்தார்கள், என்ன நோக்கத்துக்காக செய்தார்கள் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் சம்பவங்கள், விசாரணைகள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும்.

குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்காதுள்ள சந்தர்ப்பத்தில் அசாத் மௌலான, இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப பார்க்கிறார்.

இவர்கள் மதத்தின் பெயரால் உயிரிழக்க ஊக்குவித்த மத நிறுவனங்களும், அரசியல் சக்திகளும், சர்வதேச சக்திகளும் உள்ளன. இதனை காப்பாற்ற அசாத் மௌலான முயற்சிகளை எடுக்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

கிறிஸ்தவ மக்களை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ள இந்த சபை, ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியை வைத்து வேறு திசைக்கு திருப்ப பார்க்கின்றனர்.

ஐ.எஸ். அமைப்பு மிகவும் ஒரு கடுமையான அமைப்பாகும். அதிகளவான மூளைசாளிகளை கொண்ட அமைப்பாகும். சிறியா, ஈராக் போன்ற பகுதிகளில் போர்களை முன்னெடுத்து தோல்விடைந்த அமைப்பாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆகிரிக்காவிலும் செயல்படுகிறது.

அவ்வாறு இருக்கும் சூழலில் சபையில் இருப்பவர்கள் உள்நாட்டில் ஒரு கருத்தையும் சர்வதேசத்துக்கு ஒரு கருத்தையும் வெளியிடுவது குழப்பகரமான நிலைமைகளை தோற்றுவிக்கும். மீண்டுமொரு அச்சுத்தலான சந்தர்ப்பத்தை உருவாக்க பார்க்கின்றார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு பொய்யான விடயங்களை பேசிக்கொண்டிருக்க கூடாது. இவை மேலும் பிரச்சினைகளைதான் ஏற்படுத்தும்.

வெளிநாடு செல்பவர்கள் அங்கு தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை இல்லாமல் செய்யும் நோக்கில் இவ்வாறான நபர்களும் சில அரசியல் கட்சிகளும் இதோடு இணைந்ததான பணிகளை செய்கிறார்கள்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் பதவிகளை பறிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். நான் சிறைசாலையில் இருந்தேன். சிறைச்சாலையில் இருந்து இவ்வாறான விடயங்களை செய்ய முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

சிவநேசத்துறை சந்திரகாந்தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் அவர் தமது உரையில் நிராகரிக்கசவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.யுத்தத்தில் இலட்சக்கணக்கானோர் உயிரிழப்பு;கஜேந்திரகுமாரும் அதற்கு பொறுப்பு

இலட்சக்கணக்கான மக்கள் யுத்தத்தில் உயிரிழக்க காரணமாக இருந்த தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும் அதன் உறுப்பினர்களும் அசாத் மௌலான போன்ற போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்களின் கருத்துகளை வைத்து குளிர்காய நினைக்க வேண்டாம்“ – என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

கஜேந்திரன் எம்.பி போராட்டக்காலம் பற்றி பேசியிருந்தார். அவரது தலைவர் கஜேந்திரகுமாரிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், அவர் தமிழ் மக்களுக்காக போராடினாரா?.

அவர்கள் போராடாமல், போராட்டத்தின் வலிகளையும், தமிழ் மக்களின் சடலங்களையும் வைத்து அரசியல் செய்யும் குழுவினராகும்.

கஜேந்திரன் எம்.பி மற்றும் அவரின் தலைவர், தலைவரின் தலைவர் மற்றும் பாட்டனார் ஆகியோர் யாரென மக்களுக்குத் தெரியும். ஆகவே, கஜேந்திரன் எம்.பி இவர்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடையும் தருவாயில் படையினர் ஏ9 வீதியை கைப்பற்றிவிட்டனர். புதுகுடியிருப்பை நோக்கி படையினர் நகர்கிற போது, தர்மபுரம் தாண்டி நெத்தலி பாலத்தின் ஊடாக விஸ்வமடுவை நோக்கி படையினர் செல்லும் போது, பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசிய விடயங்களை மறந்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளை காப்பாற்றுவது போன்றும், வெளிநாடுகளில் வாழும் மக்களை காப்பாற்றுவது போன்றும், விடுதலைப் புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்றும் கூறியதுடன், 3000ம் சவப்பொட்டிகளை நாங்கள் தயாரித்திருக்கிறோம், அதில் படையினரின் உடலங்கள் வரும் சிங்களவர்ளே பார்க்கொண்டிருங்கள் என்றார்.

இவ்வாறு மக்களை ஏமாற்றி ஆயுதங்களுக்கான பணத்தை கோரினார்கள். உலங்கு வானூர்தியில் மக்களை வெளியேறுமாறு படையினர் துண்டு பிரசுரங்களை போட்ட போது அதை மக்களை நம்ப விடாது இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாகவிருந்த இதே அமைப்பினர் இன்று பிள்ளையான் செய்தார், அவர் செய்தார் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆகவே, போராட்டம் என்றால் என்ன? போராட்டத்தின் வலிகள் என்ன? என்று இவர்களுக்கு தெரியாதிருக்கும். அரசியலுக்காக எதையும் பேச முடியும் என்பதற்காக பேசக்கூடாது.

கடந்தகாலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டுமென செயல்படுகிறோம். கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் மற்றும் போலி தேசியத்தால் அழிந்தபோன இந்த மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப நினைக்கிறோம்.

அசாத் மௌலான போன்றே புள்ளுறுவிகள், தாங்கள் வாழ்வதற்காக மற்றவர்களை காட்டிக்கொடுக்கின்றனர். அதில் எவரும் குளிர்காய நினைக்க வேண்டாம்” என்றார்.