ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தயாராகும் இலங்கை அரசாங்கம்

0
24
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தல் உட்பட தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கத்திலேயே பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கலப்பு முறையின் கீழ் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி கோரிய அமைச்சரவை தீர்மானத்தை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.

யோசனையின் பிரகாரம் தொகுதிவாரி முறையின் கீழ் 160 உறுப்பினர்களும் விகிதாசார முறைமையின் கீழ் 65 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இது தொடர்பான பணிகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவை உபகுழு அமைக்கப்படவுள்ளது.

தற்போது விருப்பு வாக்குகள் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

இந்த தேர்தல் முறைமையில் மாற்றம் தேவை என கடந்த காலத்தில் அனைத்து தரப்பாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதற்கான பல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருந்தன.

2002ஆம் ஆண்டுமுதல் 2004 ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று தேர்தல்முறை மாற்றத்திற்கான பணிகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டது. தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்கட்சி எம்.பி.யாக இந்த குழுவுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட கடுமையான அரசியல் நெருக்கடிகளால் இந்த பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல்முறை மாற்றம் என்ற ஆயுதத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையான எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.