இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

0
44
Article Top Ad

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு-7 இல் அமைந்துள்ள தெவட்டகஹ வத்த பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்றது.

இதன்போது, “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்” ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94) 117966396, WhatsApp தொலைபேசி எண்: (+94) 767463391 அல்லது மின்னஞ்சல்: [email protected] ஊடாக தேவையான உதவிகளைப் பெற முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இஸ்ரேல் நாட்டில் தொழில் புரியும் இங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலில் இலங்கையர்கள் தொழில் புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கென தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் முழுநேர கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இஸ்ரேலில் இருக்கும் உங்கள் உறவினர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் 1989 என்ற எமது துரித இலக்கத்துக்கு தகவல் வழங்கினால் தூதரகம் ஊடாக அது தொடர்பான தகவல்களை கேட்டறிந்து அறிவிப்போம் என பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் ஏழாவது நாளாகவும் தொடரும் போர்

காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ஆம் திகதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். அதன் பின் இஸ்ரேலின் தென் பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய விமானப்படை காசா நகரில் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,200 ஆகவும், காசா பகுதியில் உயிரிழப்பு 900 மாகவும் அதிகரித்துள்ளது.

ஏழாவது நாளாகவும் இன்று இஸ்ரேல்- பாலஸ்தீன போர் தொடர்கிறது.