ரணிலின் சீன விஜயம் – இலங்கைக்கு நன்மைகளையே பெற்றுத்தரும் ; சீனாவுக்கான முன்னாள் தூதுவர்

0
103
Article Top Ad

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்திற்கு சீன முதலீடுகளை கொண்டுவரப்படும் என சீனாவுக்கான இலங்கை தூதுவராக பதவி வகித்து இலங்கை திரும்பியுள்ள கலாநிதி பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.

“கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணித்த சீன ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் குரூப் கோ லிமிடெட் ஆகிய இரண்டு பெரிய சீன நிறுவனங்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

கண்டி வழியான மத்திய நெடுஞ்சாலையையும் சீனா அமைக்கும் எதிர்பார்ப்பில் சீனா உள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது இதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்“ – என பாலித கொஹோன கூறியுள்ளார்.

சீனாவுக்கான இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து பாலித கொஹோன கருத்து வெளியிடுகையில், சீனாவின் EXIM வங்கி இலங்கைக்கு உதவலாம். sri lanka haircut debt க்கு சீனா உதவும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடனைத் திருப்பிச் செலுத்துதலை ஒத்திவைக்க சீனா முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவதுடன், கடனுதவி பெறுவதற்குப் பதிலாக சீன முதலீட்டை இலகுபடுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறைமுக நகரத்திலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம் சீனா இலங்கையின் பொருளாதாரத்துக்கு பலமளிக்கும் என கருதப்படுகிறது.

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக் இலங்கையில் எரிபொருள் விநியோக வியாபாரத்தில் அண்மையில் முதலீடு செய்தது.

இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடனைப் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பாலித கொஹோன, “பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் உடனடியாக வருவாயை எதிர்பார்க்க முடியாது.

அவை புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கின்றன. அது படிப்படியாக மக்களுக்கு வருமானத்தை உருவாக்கும்.

பாதைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வளரும் நாடுகள் ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு இதுதான் காரணம்“ என்றார்.