உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் வரலாற்று வெற்றியது பெற்றது இந்தியா

0
28
Article Top Ad

ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி தொடர்கின்றது.

2023 உலகக் கிண்ண தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் இடையே எட்டுப் போட்டிகள் நடந்துள்ளன.

இந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

அதாவது, ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை.

இம்முறை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் அணியின் செயல்பாடு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.

இன்றைய போட்டியின் சுருக்கம்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவுசெய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் 42.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பாகிஸ்தான் அணி 29 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.

இங்கிருந்து அந்த அணி 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இருவரும் ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் 191 ஓட்டங்களுக்கு சுறுண்டது.

பாகிஸ்தான் கடைசி 8 விக்கெட்டுகளை 36 ஓட்டங்களுக்கு இழந்தது. பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றிருந்தனர்.

இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் பாண்டியா ஆகியோர் தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில், 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தனர்.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 86 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரோகித் சர்மா ஆறு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார்.

கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் 131 ஓட்டங்களை எடுத்து சதம் அடித்திருந்தார்.

பாகிஸ்தானின் எந்த பந்து வீச்சாளராலும் இந்திய துடுப்பாட்ட வீரர்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஷஹீன் ஷா அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்களை அடித்த சர்மா
இன்றைய போட்டியில் மூன்று ஆறு ஓட்டங்களை அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 300 ஆறு ஓட்டங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அடித்த ஆறு ஓட்டங்கள் அடங்களாக இதுவரை 303 ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஷாஹித் அப்ரிடி 351 ஆறு ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 331 ஆறு ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.