அமெரிக்காவில் நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தோல்வியை தழுவக்கூடுமென புள்ளிவிவரங்கள் வெளியாகி வருவதால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பலஸ்தீன போரை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்பதாக எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
இஸ்ரேல் – பலஸ்தீன போர் விவகாரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“இஸ்ரேல் – காஸாவில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தும் பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கதாகும்.
முதலாம் மற்றும் இரண்டாம் யுத்தத்தின்போது உலகத்தில் அனைவராலும் அடித்து விரட்டப்பட்டவர்களாக யூதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்தான் பலஸ்தீன மக்கள். ஆனால், இன்று அவர்களது நிலத்தையே ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேலியர்கள் இறங்கிவிட்டனர்.
இந்த இடத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களை சர்வதேசம் இன்னமும் ஒரு தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. நாட்டை கைப்பற்றிய இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள ஐ.நா. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.
பலஸ்தீனத்தில் உள்ள வைத்தியசாலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிறு பிள்ளைகள்கூட இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
ஆனால், இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணிக்குச் சார்பான அறிவிப்புகளே வெளியாகி வருகின்றன. ஹமாஸ் இயக்கம் ஏவுகணைகளை ஏவிவிட்டனர் என்பதே இவர்களது ஒரே வாதமாக உள்ளது.
பலஸ்தீன பிரதமர், இதற்கும் எமக்கும் தொடர்பில்லை யுத்தத்தை நிறுத்துமாறு கோருகிறார்.
உலகில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் “பிரிக்ஸ்“ கூட்டமைப்பின் ஊடாக வலுவான நாடுகளாக மாறி வருகின்றன. எதிர்கால அரசியல் இந்த கூட்டமைப்பை மையப்படுத்தியே இருக்கும்.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. பைடன் அதில் வெற்றிபெற பார்க்கிறார். ஆனால், கருத்துக்கணிப்புகள் அவருக்கு எதிராக உள்ளன. அதற்காக இந்த விவகாரத்தை பயன்படுத்த பார்க்கின்றனர்“ என்றார்.