சனத் ஜயசூரியவின் சாதனையை 26 வருடங்களின் பின் முறியடித்த குயின்டன் டி காக்

0
29
Article Top Ad

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவின் 26 வருடகால சாதனையை தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டி காக் முறியடித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் சனத் ஜயசூரிய 151 ஓட்டங்களை இந்திய அணிக்கு எதிராக பெற்றிருந்தார்.

இந்த ஓட்ட எண்ணிக்கைதான் வான்கடே மைதானத்தில் கடந்த 26 வருடங்களில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் பங்களாதேஷுக்கு எதிராக 174 ஓட்டங்களை குவித்ததன் மூலம் சனத் ஜயசூரியவின் 26 ஆண்டுகால சாதனையை வான்கடே மைதானத்தில் இன்று குயின்டன் டி காக் முறியடித்துள்ளார்.

நடப்பு உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு விருவிருப்பான ஆட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

2023 உலகக் கிண்ண தொடரின் 23வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின, மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டிய இடம்பெற்றிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த உலகக் கிண்ண தொடரில் மூன்றாவது அதிகபட்ச ஓட்டக்குவிப்பு இதுவாகும். மூன்று முறையும் தென்னாப்பிரிக்காவே இந்த ஓட்டக் குவிப்பை செய்துள்ளது.

428/5 எதிர் இலங்கை அணி

399/7 எதிர் இங்கிலாந்து

382/5 எதிர் பங்களாதேஷ்

குயின்டன் டி காக் அதிரடி
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அதிகபட்சமாக 140 பந்துகளில் 174 ஓட்டங்களை எடுத்திருந்தார். அவர் ஏழு ஆறு ஓட்டங்களையும், 15 நான்கு ஓட்டங்களையும் விளாசியிருந்தார்.

இதையடுத்து ஹென்ரிச் கிளாசன் 49 பந்துகளில் 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அணித் தலைவர் எய்டன் மார்க்ரம் 69 பந்துகளில் 60 ஓட்டங்களை குவித்தார்.

பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷௌரிஃபுல் இஸ்லாம், மெஹ்தி ஹசன் மிராஜ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

தனி ஆளாக போராடிய மஹ்முதுல்லா
383 என்ற பெரிய இலக்கை நோக்கி பங்களாதேஷ் துடுப்பெடுத்தடியது. எனினும், அந்த அணி தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

81 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. 100 ஓட்டங்களை குவிப்பதே சந்தேகமாக இருந்தது. எனினும் மஹ்முதுல்லா தனி ஆளாக போராடி ஓட்டக்குவிப்பை செய்தார்.

முஸ்தாபிசுர் ரஹ்மானுடன் ஒன்பதாவது விக்கெட்டுக்கு இணைந்து 68 ஓட்டங்களை குவித்து உலகக் கிண்ண வரலாற்றின் மிகப்பெரிய தோல்வியில் இருந்து அணியை மஹ்முதுல்லா காப்பாற்றினார்.

எனினும் மஹ்முதுல்லாவால் கூட அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதையடுத்து ஒட்டுமொத்த அணியும் 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மஹ்முதுல்லா 111 பந்துகளில் 111 ஓட்டங்களை குவித்து சதம் விளாசினார். லிட்டன் தாஸ் 22 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

சதம் அடித்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பை தென்னாப்பிரிக்காவிடம் இருந்து மஹ்முதுல்லா பறித்தார்.

மஹ்முதுல்லா மற்றும் லிட்டன் தவிர, எந்த பங்களாதேஷ் வீரரும் 20 ஓட்டங்களை தொட முடியவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மார்கோ ஜோன்சன், லிசார்ட் வில்லியம்ஸ் மற்றும் ககிசோ ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அரையிறுதி வாய்ப்பை இழந்தது?
இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை ஐந்து ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேசமயம் பங்களாதேஷ் அணி ஐந்து ஆட்டங்களில் சந்தித்த நான்காவது தோல்வி இதுவாகும். மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், 10 புள்ளிகள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கான பந்தயத்திலிருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டது என்றே கூறவேண்டும்.

உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வெற்றி
மார்ச் 2015 இல் ஆப்கானிஸ்தானை 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அவுஸ்திரேலியா உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தின் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மார்ச் 2007 இல் பெர்முடாவை 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவின் வெற்றி உலகக் கிண்ண போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக கூடிய ஓட்ட வித்தியாச வெற்றியாகும்.

2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா இந்த பட்டியலில் மூன்றாது இடத்தில் இருக்கின்றது.