ஊடகவியலாளர் கு.டிலீப்பை நான்கரை மணிநேரம் துருவியது ரி.ஐ.டி

0
64
Article Top Ad

2020ஆம் ஆண்டு ‘உதயன்’ பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக ‘உதயன்’ பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப் அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று (01) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி ‘உதயன்’ பத்திரிகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் தொடர்பான செய்தியும், ஒளிப்படமும் வெளியாகியிருந்தது. அது தொடர்பாகவும், அன்றைய தினம் வெளியாகியிருந்த தமிழ்த் தேசியக் கட்சி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த செய்தி தொடர்பாகவுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

‘உதயன்’ பத்திரிகை செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதன் கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் செய்தி மற்றும் ஒளிப்படம் தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.