யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன?

0
90
Article Top Ad

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து போன சில நாட்களின் பின், கடந்த வாரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.கடந்த சில ஆண்டுகளில் இது இரண்டாவது வருகை.  சீனத் தூதுவர்

இங்கே அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்றார். சீனாவில் உள்ள ஒரு பௌத்த அறக்கட்டளையின் பெயரால் நலிவுற்றோருக்கு உதவிப் பொதிகளை வழங்கினார். யாழ் ஜெட்விங் சுற்றுலா விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 10 பேர்களைச் சந்தித்தார்.

பொதுவாக ஏனைய வெளிநாட்டுத் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரும்பொழுது உதவியாளர்களோடு வருவார்கள். சோடியாக வருவதில்லை. ஆனால் சீனத் தூதுவர் அவருடைய மனைவியோடு வந்தார். ஜெட்விங்கில் நடந்த சந்திப்பில் அவருடைய மனைவியும் பங்குபற்றினார்.உரையாடல்களில் அவரும் தன் கணவருக்கு உதவினார்.அது வித்தியாசமாக இருந்தது.

ஒரு சிவில் சமூக பிரதிநிதி வடக்கில் உள்ள கடலட்டைப் பண்ணைகளைப் பற்றிக் கேட்டார். அதற்குப் பதில் அளிக்கையில், வடக்கில் கடலட்டை பண்ணைகளை தாங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைவிட்டு விட்டதாகச் சீனத் தூதுவர் சொன்னார்.சீனாவின் முதலீடுகள் உள்நோக்கமுடியவை அல்ல என்றும்,ஊடகங்களில் கூறப்படுவதுபோல சீனாவிடம் மறைவான நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது என்றும் கூறினார்.

மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை விமர்சித்தார். சீனா தொடர்பான மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் அந்த விமர்சனம் அமைந்திருந்தது. அதே சமயம் இந்தியா சீனாவின் நெருக்கமான பொருளாதாரப் பங்காளி என்ற பொருள்பட சொன்னார். எனினும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் சீனா மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களுக்காக முதலீடு செய்ய முற்பட்ட பொழுது அதனை ஒரு வெளிநாடு தடுத்தது என்று சொன்னார். அதுபோலவே சீனாவில் உள்ள கன்பூசியஸ் பல்கலைக்கழகமும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து முன்னெடுக்கவிருந்த சில நடவடிக்கைகளையும் ஒரு வெளிநாடு தடுத்துவிட்டது என்று சொன்னார். அவர் வெளிநாடு என்று சொன்னது இந்தியாவைத்தான். மற்றபடி இந்தியாவை அவர் அதிகம் விமர்சிக்கவில்லை.

இலங்கைத் தீவில் உள்ள மூன்று இனங்களையும் சீனா ஒரே விதமாகவே அணுகுகின்றது என்றும் சொன்னார். இதில் சீனா பாரபட்சம் காட்டவில்லை என்றும் சொன்னார்.பெருந்தொற்று நோய்க்கு காலத்தில் சீனா இலங்கைக்கு சினோபாம் தடுப்பூசிகளை கொடையாக வழங்கியது.அதன்போது,தான் கோத்தாபயவிடம் அந்தத் தடுப்பூசிகள் தமிழ் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாகவும் சொன்னார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் அவரிடம் கேள்வி கேட்டார்கள். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வரும் பொழுது சீனா அரசாங்கத்தை ஆதரிப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அரசாங்கத்தை ஆதரிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக, அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளையும் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்கள். மேலும் அண்மை ஆண்டுகளில் ஐநா மனித உரிமைகள் பேரவையில், இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தெரியும் ஒரு பின்னணியில், சீனா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது என்றும் அங்கு கூறப்பட்டது.

அதோடு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா ஏற்கனவே ஒரு தீர்வை முன் வைத்திருக்கிறது. மேற்கு நாடுகள் ஐநாவில் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. ஆனால் சீனா இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை இதுவரை தெளிவாகச் சொல்லவில்லை என்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்கள்.குறிப்பாக அண்மையில் பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் வெடித்தபோது சீனா “இரு நாடு” என்ற நிலைப்பாட்டை ஆதரித்ததைச் சுட்டிக்காட்டிய அவர்கள்,அதேபோன்று இலங்கைத் தீவிலும் இனப்பிரச்சினை தொடர்பாக சீனா தெளிவான ஒரு நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்றும் கேட்டார்கள்.

முக்கியமாக இனப்பிரச்சினைக்கு சீனாவின் தீர்வு என்ன என்ற கேள்விக்கு வழமையாக கூறப்படும் “டெம்ப்லேட்” வகைப் பதிலாகிய, “ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை” என்ற பதிலை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அத்தகைய பதில்களால் தமிழ் மக்கள் ஏற்கனவே சலிப்படைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சீனத் தூதுவர் ஒவ்வொன்றாகப் பதில் சொன்னார்.சிவில் சமூகப் பிரதிநிதிகளை நண்பர்களே என்று அவர் விழித்தார்.ஆழமான விஷயங்களுக்கு ஆழமான பதில்களைச் சொல்ல வேண்டி வந்தபொழுது அவர் சீன மொழியில் பேசினார்.அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.இலங்கையின் இனப்பிரச்சினையில் சீனா நேரடியாகத் தலையிடாது என்று அவர் சொன்னார். ஏனென்றால் சீனா எந்த ஒரு நாட்டினுடைய உள்விவகாரத்திலும் தலையிடாது என்றும் சொன்னார். மேலும் பலஸ்தீன விவகாரத்தில் சீனா ஐநாவின் நிலைப்பாட்டையே ஆதரிப்பதாகவும் சொன்னார். அங்கு இருநாடு என்ற நிலைப்பாடு ஐநா தீர்மானத்தின் வழி வந்தது என்றும், உலக சமூகம் ஒன்றாக எடுத்த முடிவு அது என்றும், எனவே ஐநா தீர்மானத்தை சீனா வலியுறுத்துவதாகவும் அவர் சொன்னார்.

சீனா வடக்கு கிழக்கில் பாரபட்சமின்றி முதலீடு செய்ய முன்வருவதாகவும், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால், கோரிக்கைகள் உரிய தரப்புகளுக்கு ஊடாக உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டால், சீனா தமிழ் மக்களுக்கு உதவக் காத்திருக்கிறது என்ற பொருள்பட அவருடைய பதில்கள் அமைந்தன.பொருளாதார மேம்பாடு அபிவிருத்தி போன்றவற்றின் மீதே அவருடைய கவனக்குவிப்பு அதிகமாக இருந்தது.

ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் சீனா தலையிடாது என்றால், ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் சீனா தலையிடக்கூடாது. அதாவது ஆதரவாகவும் வாக்களிக்கக்கூடாது; எதிராகவும் வாக்களிக்கக்கூடாது. ஆனால் சீனா அரசாங்கத்தை ஆதரிக்கின்றது. அங்கே மேற்கு நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை சீனா எதிர்க்கிறது.இது ஒரு தலையீடுதான். மனித உரிமைகள் பேரவையில் சீனா தமிழ் மக்களுக்கு எதிராகத் தலையீடு செய்கின்றது என்று பொருள். ஆனால் சீனத் தூதுவர் கூறுகிறார் தாங்கள் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவைத்தான் பேணுவதாக. எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்ற கேள்விக்கு கடைசிவரை பதில் சொல்லவே இல்லை.உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாது என்பதுதான் அதற்குரிய பதிலும்.

இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்ந்த ஆச்சந்திப்பில், முதலீட்டாளர்கள் இடைக்கிடை உரையாடலின் போக்கை பொருளாதார விவகாரங்களின் மீது திருப்பினாலும், உரையாடலின் பெரும் பகுதி இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கியே மையம் கொண்டிருந்தது. சீனத் தூதுவர் அதிகமாக பொருளாதார நடவடிக்கைகள் குறித்தே பேச விரும்பினார். தமிழ்ப் பகுதிகளில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பகுதியினருக்கு சீனா உதவும் என்றும் உறுதியளித்தார். ஆனால் அச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழர்கள் அதிகபட்சமாக இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கியே உரையாடலை இழுத்துக் கொண்டு போனார்கள். சீனத் தூதுவர் அபிவிருத்தி,பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பேசத் தொடங்குவார். ஆனால் எந்த அபிவிருத்தியச் செய்வதாக இருந்தாலும் அதைச் செய்வதற்கான உரிமை எங்களுக்கு வேண்டும். அதை எங்கே செய்வது? எப்படிச் செய்வது? எப்பொழுது செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கூட்டு உரிமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்பதனை அங்கு வந்திருந்த குடிமக்கள் சமூகத்தவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். அது ஒரு விதத்தில் சீனத் தூதுவருக்கு சலிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கலாம்.

சீனா இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிர்ணயகரமான விதங்களில் தலையிடாது என்பதனை அவர் அழுத்தமாக கூறினார்.அதே சமயம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் உதவத் தயார் என்பதையும் வெளிப்படுத்தினார். தமிழர்கள் கேட்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் சீனா உதவாது என்பது தெரிந்த பின்,சீனா உதவக்கூடிய விடயங்களில் தமிழ்த் தரப்பு கேட்கக்கூடியதை கேட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்திருக்க கூடும்.

எனினும், தமிழ் மக்கள் அபிவிருத்தி மைய உரையாடல்களை விடவும் உரிமை மைய உரையாடல்களில்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதே அச்சந்திப்பின் இறுதியாக,பிழிவாக, சீனத் தூதரகத்துக்கு பரிமாறப்பட்ட செய்தியாக இருக்கும்.