சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் ‘துக்க தினம்’

0
67
Article Top Ad

யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் நிறுத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு, கிழக்கிலங்கையில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.

“எமது உறவுகள் எமக்குக் கிடைக்கும்வரை அல்லது எமக்கு நீதி கிடைக்கும்வரை சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினமே” என போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி, மரியசுரேஷ் ஈஸ்வரி, போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதியை வழங்கத் தவறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச சமூகத்தால் கூட தமிழ் மக்களாகிய எமக்கு நீதி வழங்க முடியவில்லை, ஏனைய நாடுகளில் குறிப்பாக உக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு கண்ணீர் வடிக்கின்றனர், ஐக்கிய நாடுகள் சபையும் அதுத் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றது. எனினும் இலங்கையில் மாத்திரம் தழிர்கள் கொல்லப்பட்டு கிடங்கில் தள்ளப்படும்வரை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனினும் அந்த நேரத்தில் அவர்கள் இதனை கைவிட்டாலும், இந்த நேரத்தில் எமக்கு நீதியை வழங்க அவர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.”

வவுனியாவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் டிசம்பர் 10 ஆம் திகதியுடன் 2,485 நாட்கள் பூர்த்தியாகியுள்தோடு, மனித உரிமைகள் தினத்தையொட்டி போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?” என தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறுக் கோரியும், கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான மனித உரிமை மீறல்களையும் தடுக்குமாறு  வலியுறுத்தியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக சிவில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் மனித உரிமைகள் தினத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று முன்தினம் (10) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பாற்பண்ணையாளர்களால் மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக செப்டெம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 87ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில், மேய்ச்சல் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை 150க்கும் மேற்பட்ட மாடுகள் படுகொலை செய்துள்ளதாக
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“மாடுகளை தொடர்ச்சியாக சுடுவதும், வெட்டுவதும், களவாடுவதும்தான் வேலையாக இருக்கிறது. அங்கு பொலிஸ் என்ற போர்வையில் ஒன்று போடப்பட்டுள்ளது. மாட்டை சுட்டுவிட்டார்கள் எனக் கூறினால் கரடியனாறு பொலிஸில் சென்று முறையிடுமாறு கூறுவார்கள். பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு சென்றுக் கூறினால் வெறுமனே பார்த்துவிட்டு சும்மா இருக்கின்றார்கள். இப்படித்தான் எமக்கு நீதி கிடைக்கிறது. நீதி எமக்குக் கிடைக்கப்போவது இல்லை. 153 மாடுகளை இழந்துள்ளோம் எனச் சொன்னால் அதன் பெறுமதியை பாருங்கள். இன்னும் இதற்கு ஒரு முடிவும் இல்லை. ஜனாதிபதி தீர்வைத் ததருவதாக சொன்னார் எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் இப்படி எம்மை ஏமாற்றுகிறார்கள். யாரிடம் சென்றுக் கூறுவது.”

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும், கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வழங்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துதல்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் டிசம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி நகரிலும், 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

75ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் தெற்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை, ஆனால் மனித உரிமைகள் நினைவேந்தல்களும் கூட்டங்களும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தலைநகரில் பல பொது அரங்குகளில் நடத்தப்பட்டன.