இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இன்று (டிச.30) கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. என்றாலும் பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.
அச்சே பகுதியிலுள்ள கடற்கரை நகரமான சினாபாங்-ன் கிழக்கு பகுதியில் 362 கி.மீ. (225 மைல்) தூரத்தில் கடலுக்கடியில் 10 கி.மீ. (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதன் தாக்கம் 5.9 ரிக்டராக இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், ”சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்துக்கு பிறகான பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றது.
சுமார் 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியா தீவுக்கூட்டம், பசிபிக் படுக்கையில் உள்ள ‘ரிங்க் ஆஃப் ஃபையர்’-ல் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த நவ.21 அன்று ஏற்பட்ட 5.6 அளவிலான நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவாவின் சியாஞ்சுர் நகரில் 331 பேர் உயிரிழந்தனர், 600 பேர் காயமடைந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலேவசியில் ஏற்பட்ட சுனாமியில் 4,340 பேர் உயிரிழந்ததுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகாமான உயிரிழப்பு இதுவாகும்.
கடந்த 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர். இதி்ல் பெரும்பாலானவர்கள் இந்தோனேசிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது