இரணைத்தீவு விவகாரம்; கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

0
135
Article Top Ad

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த விசாரணையின்போது ஆணைக்குழு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

“கிளிநொச்சி மாவட்டத்தின், இரணைத்தீவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி செல்ல முயன்ற போது என்னை கடற்படையினர் தடுத்தன் மூலம் எனது அடிப்படை உரிமை மீறப்பட்டது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்டரீதியாக தடைகள் இருந்தால் மாத்திரமே முன்னனுமதியைப் பெறுவதற்கு கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நடமாடும் சுதந்திரம் இலங்கை அரசியல் யாப்பு பிரிவு 14 (1) (எச்) மற்றும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தீர்மானம் 12 கீழ் அளிக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்திய அந்த ஆணைக்குழு, “எதிர்காலத்தில் இரணைத்தீவிற்கு குடிமக்கள் செல்லும் போதும் அவர்களின் நடமாடும் சுதந்திரத்தில் குறுக்கீடுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், இதில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதோ அல்லது இந்த விடயத்தை இணக்கப்பாடு காணும் வழிமுறைகளுக்கு எடுத்துச் செல்வதோ முறையானதாக இருக்காது” என தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி காலை ருக்கி பெர்னாண்டோவும் வேறு இரு ஊடகவியலாளர்களும் இரணைத்தீவிற்குச் செல்லும் நோகில் முழங்காவிலிலுள்ள இரணைமாதா நகரைச் சென்றடைந்தனர். ஆனால், அங்குள்ள சோதனைச்சாவடியில் அவர்கள் மூவரும் படகில் ஏறிச் செல்வதை தடுத்தனர். இதன் மூலம் இரணைத்தீவிற்கு செல்லும் தனது நடமாடும் சுதந்திரம் தடுக்கப்பட்டது என்று அவர் முறையிட்டார்.

இதையடுத்து, அந்த ஆணைக்குழு இலங்கை கடற்படையிடமிருந்து அறிக்கை ஒன்றை கோரியது.

இதற்கு பதிலளித்த கடற்படைத் தளபதி, கடற்படை தலைமையகத்திற்கும் வடக்கு மத்திய கடற்படை கட்டளைப்பிரிவுக்கும் இடையே “தொடர்பாடல் இடைவெளி” இருந்தமையே காரணம், எந்த ஊடகவியலாளரும் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

அதையே ஒரு முரண்பாடாகக் கருத முடியும். ஏனென்றால், “ஏதாவது ஊடகவியலாளர் எதிர்காலத்தில் அந்த தீவிற்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் முதலில் கடற்படையினருக்கு தெரிவிக்க வேண்டும், அதையடுத்து அவர்கள் அத்தீவிற்குச் செல்வதற்கான பயண ஒழுங்கு தொடர்பில் கடற்படை உதவ முடியும்” என கடற்படை தலைமையகம் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.

தமது விசாரணையில் ஒரு பகுதியாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலிருந்தும் ஒரு அறிக்கையை கோரியிருந்தது. அதில் அவர்கள் “இரணைத்தீவில் பொலில்ஸ் மையம் ஒன்று இல்லாததால், பொதுவாக அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கடற்படை விழிப்பாக உள்ளது, அதனால், இரணைத்தீவில் வசிக்காதவர்கள் யாரும் அங்கு செல்ல முயன்றால், அவர்களது அடையாளத்தை கடற்படையினர் சோதனை செய்கின்றனர்” என பதிலளித்திருந்தனர்.

ருக்கியும் அவரது குழுவினரும் இரணைத்தீவிற்குச் செல்வதற்காக ஒர் வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

”கொழும்பிலிருந்து ஒரு வாகனத்தில் நாங்கள் இரவு முழங்காவில் சென்றோம். அங்கிருந்து இரணைத்தீவிற்குச் செல்வதற்காக உள்ளூர் மீனவர்களிடமிருந்து ஒரு படகையும் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு உள்ளூர் பங்குத்தந்தை உட்பட பலர் அங்கு எமக்காக காத்திருந்தனர். அங்கு உள்ளூர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு போராட்டம் மற்றும் கூட்டத்தில் நானும் பங்குபற்ற எண்ணியிருந்தேன். அங்குள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயத்திற்கு விஜயம் செய்யவும், அந்த தீவில் நிலவும் சமூக, பொருளாதர, அரசியல் சூழல் குறித்து ஒரு கட்டுரை எழுதவும் நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் கடற்படையின் தன்னிச்சையான கட்டுப்பாடுகள் காரணமாக என்னால் இதில் எதையும் செய்ய முடியவில்லை”.

சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பணியாற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த புகைப்படச் ஊடகவியலாளரான எல்க் ஸ்கொலியர்ஸ் இரணைத்தீவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டார். புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு பல ஊடகங்களுக்குச் செயற்படும் அவர் செய்தி சேகரிப்பிற்காக முன் அனுமதியும், ஊடக அமைச்சிலிருந்து அதற்கான அங்கீகார அட்டையையும் பெற்றிருந்தார்.

“இலங்கைகு பணி நிமித்தமாகச் சென்றுள்ளேன். முழங்காவிலுள்ள கடற்படை மற்றும் பதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஒரு புகைப்பட ஊடகவியலாளர் என்ற வகையில் என்னை இரணைத்தீவிற்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இலங்கையில் சட்டபூர்வமாகப் பணியாற்ற அனுமதியும் பெறிருந்தேன். கடற்படை என்னை எதையும் எக்ஸ் தளத்தில் பதிவிடக்கூடாது (ட்வீட்) செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினர்” என அவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பதிவிட்டிருந்தார்.

எனினும், சில மணி நேரங்கள் மற்றும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை அடுத்து இறுதியாக அவரால் அந்த தீவிற்குச் செல்ல முடிந்தது. அதை அவர் பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“6 மணி நேரமாக நான் பல கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்தும், உள்விவகார அமைச்சு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியுடனும், என்னால் இரணைத்தீவைச் சென்றடைய முடிந்தது. இந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 50 தொலைபேசி அழைப்புகளும், சுமார் 15 மின்னஞ்சல்களும் அனுப்ப வேண்டியிருந்தது” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பின்னர் கூறியிருந்தார்.

இலங்கை கடற்படையின் நடவடிக்கை சட்ட ரீதியாக இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்தாலும், தமது உரிமை மீறல்களை அங்கீகரித்து அதற்கு தனக்கு எழுத்து மூலமான மன்னிப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த ஆணைக்குழு மறுத்துவிட்டது என, ருக்கி பெர்னாண்டோ கூறுகிறார்.

இதில் தான் இரணைத்தீவிற்குச் சென்றுவந்த செலவீனங்கள் மற்றும் தனது உரிமைகள் மீறப்பட்டதற்கான இழப்பீட்டுத் தொகையும் அடங்கும் என்கிறார் அவர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இப்போது ”இலங்கை கடற்படை வடக்கு மத்திய கட்டளைப் பிரிவிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, அதில் எவ்விதத் தடையுமின்றி, முன் அனுமதி அல்லது அறிவிப்புச் செய்யாமல் இலங்கையின் அனைத்து குடிமக்களும் இரணைத்தீவிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.