Cricket: கார் விபத்தில் சிக்கிய தென்னாப்பிரிக்க வீரர்.. மீண்டது எப்படி தெரியுமா? நம்பிக்கை தரும் உண்மை கதை

0
51
Article Top Ad

வாழ்க்கையில் சாதிக்க வயதும் வேறு பல இன்னல்களும் தடையாக இருக்காது. தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் David Bedingham டேவிட் பெட்டிங்கம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

29 வயதான டேவிட் பெட்டிங்கம் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டேவிட் பெட்டிங்கம் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். காலிஸ், கிப்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் படித்த பள்ளியில் டேவிட் பெட்டிங்காம் படித்ததால் கிரிக்கெட் அவருக்கு சிறுவயதில் இருந்து பிடித்து விட்டது.

15, 16 வயதில் எல்லாம் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரின் ஸ்டைலை காப்பியடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பெட்டிங்கம் 21 வயதில் இருக்கும் போது பெரிய கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இந்த விபத்திற்கு பிறகு பெட்டிங்கம்மால் நடக்கவே முடியவில்லை. இதன் காரணமாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து பயிற்சி செய்து தன்னுடைய கனவை விடாமல் துரத்திக் கொண்டிருந்த பெட்டிங்கம் மெது மெதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கவுண்டி கிரிக்கெட்டில் மட்டும் 89 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை அடித்திருக்கிறார். இந்த விபத்து நிகழாமல் இருந்திருந்தால் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருப்பார்.

ஆனால் தற்போது இது குறித்து பேசி உள்ள பெட்டிங்கம் ஐந்தாண்டுகளுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கலாம். ஆனால் அது நடைபெறாமல் போனதை நினைத்து நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விளையாடி இருந்தால் என்னால் இவ்வளவு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்க முடியாது. உள்ளூர் கிரிக்கெட் நிறைய விளையாடுவதன் மூலம் தான் கிரிக்கெட்டில் எப்படி அணுக வேண்டும் என்ற விவரம் எனக்கு புரிந்தது.

கிரிக்கெட்டில் உள்ள உச்சம் மற்றும் சரிவுகளை எப்படி கையாள வேண்டும் என்பதெல்லாம் தெரிந்தது. எனக்கு என் தாய் நாட்டுக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதனால் தற்போது நடைபெறும் எஸ்ஏ 20 கிரிக்கெட் போட்டியில் கூட நான் பங்கேற்கவில்லை. அதிலிருந்து என் பெயரை நான் நீக்கி விட்டேன். தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறேன் என்று டேவிட் பெட்டிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ் மைல்கல்