அரை நூற்றாண்டுக்கு முன்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவேந்தல்

0
37
Article Top Ad

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வடக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றின் போது பொலிஸார் சுட்டுக் கொலை செய்த ஒன்பது பேர் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டனர்.

1974ஆம் ஆண்டு இடம்பெற்ற, நான்காவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது பேரின் நினைவாக, யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அஞ்சலி செலுத்தியதாக எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று (10)காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டார்.

50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்களின் பங்களிப்பில் ஆரம்பமாகி ஒருவாரம் இடம்பெற்ற, நான்காவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில், பிரபல தமிழ்நாட்டு அறிஞர் பேராசிரியர் நைனா மொஹமட் தனது சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த யாழ்ப்பாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ். கே. சந்திரசேகர தலைமையிலான பொலிஸ் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் வலியுறுத்திய போதும் தடைகளை மீறி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டப்பட்டிருந்த மேடைக்கு முன்னால் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஜீப் மற்றும் வேன்களில் வந்த பொலிஸார் பொல்லுகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்கியதாக மாநாட்டின் மீதான தாக்குதலில் தப்பியவர்கள் பிற்காலத்தில் தெரிவித்திருந்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீதும் விழுந்தன.

பொலிஸாரின் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், நகரைச் சுற்றியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன, மேலும் 50ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பொலிஸ் சேவையே அன்றி படையணி அல்ல

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒஸ்வல்ட் லெஸ்லி டி க்ரெஸ்டர் தலைமையிலான மூவர் அடங்கிய ஆணைக்குழு, தமது கடமைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் பொலிஸார் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது எனத் தீர்மானித்தது.

“பொலிஸ் பணி எனப்படுவது சேவையே அன்றி படையணி அல்ல என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என ஆணைக்குழுவின் ‘ஜனவரி 10 சோகம்’ அறிக்கை குறிப்பிடுகின்றது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.மாணிக்கவாசகர் மற்றும் யாழ்ப்பாண முன்னாள் பேராயர் சபாபதி குலேந்திரன் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழு 1974ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“இந்த இரவில் (ஜனவரி 10, 1974) நிராயுதபாணியான குடிமக்கள் மீது வன்முறை மற்றும் தேவையற்ற தாக்குதலை நடத்தியதற்கு பொலிஸார் குற்றவாளிகள் என்பது நாம் அடைந்த தவிர்க்க முடியாத தீர்மானம்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட விவேகத்துடன் செயற்படும் ஒரு சிவில் பொலிஸ் படையிடம் எதிர்பார்க்கப்படும் சரியான தீர்மானம் அவர்களிடம் இல்லை என்பது எங்கள் ஆழ்ந்த கவலை.
ஒரு பொலிஸ் அதிகாரி எடுத்த முற்றிலும் தவறான மற்றும் பொறுப்பற்ற தீர்மானத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகளின் சங்கிலியால் உடல் சேதம், சொத்து சேதம் மற்றும் உயிர் உயிர் சேதம் ஏற்பட்டது.
பாதுகாப்பற்ற மற்றும் அப்பாவி குடிமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிஸ் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.”