அரசின் முதலாளித்துவவாதமும் சமூக பிறழ்வுகளும் !

0
203
Article Top Ad

 ஆக்கம் இருளப்பன் ஜெகநாதன் -சுயாதீன ஊடகவியலாளர்

அரசு என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனுக்காக இயங்கும் – ஒரு கருவி என்ற கார்ல் மாக்ஸின் கூற்றினை இன்றைய இலங்கை அரசின் பொருளாதரம் குறித்த தீர்மானங்கள் உறுதிப்படுத்துகின்றன. வீழ்ச்சியுற்ற நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொண்டு அதன் நிபந்தனைகளை ஏற்க வேண்டுமென்ற நியாயத்தை முன்னிறுத்தி பலவகையான வரி அறவீடுகளை அரசு நடைமுறைபடுத்தியுள்ளமை , நடுத்தர சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் கடினமாகியுள்ளது. போதை பொருள் வியாபாரிகள் என்று சொல்லப்படுகின்ற நபர்களின் சொத்துக்களை முடக்கி அரசுடைமையாக்கும் செயல்திட்டத்தில் இறங்கியுள்ள அரசு ! சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெருமளவில் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுற வைத்தமைக்கு பொறுப்பான முன்னாள் அரசாங்கத்தின் அங்கத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமை – மொட்டு கட்சியின் பெரும்பான்மையின் ஆதரவோடு பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க வெளிப்படுத்தும் செய்ந்நன்றி கடன் – என்று பலர் விமர்சித்தாலும் – இது முதலாளித்துவ சிந்தனையின் மூலோபாயமாகும்.

அதிகார போட்டி நடக்கும் அரசியல் சந்தையில் இருதரப்பில் எவர் வெற்றி அடைவாரோ அவர் தோல்வியுற்றவரை காக்க வேண்டும் என்பதே அவர்களுக்குள் ஒத்துக்கொள்ளப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய தேசிய கட்சி உட்பிளவு சஜித் வெளியேற்றம் என பல தரப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து – கேலிப்பொருளாய் ஆகிய (அல்லது ஆக்கப்பட்ட) தனிமைப்படுத்தப்பட்டு அரசியலை துறந்து போகும் நிலை வந்தபோதும் கூட தற்போதைய ஜனாதிபதி மொட்டு கட்சியினால் (ராஜபக்ஷவினால் ) பாதுகாக்கப்பட்டமையை குறிப்பிடலாம். மறுபுறம் போர் குற்றம் , மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்ட ராஜபக்ஷ தரப்பினருக்கெதிராக சர்வதேச விசாரணை அவசியமற்றவை என்று பகிரங்கமாகவே தெரிவித்து தென்னிலங்கையின் ஆதரவையும் பெற்று கொண்டு அதேவேளை ராஜபக்ஷவினரையும் காத்து ரட்சிக்கும் தற்போதைய ஜனாதிபதியின் சாணக்கியதையும் மக்கள் நினைவில் கொள்ளுதல் வேண்டும். அரச நிர்வாக ஊழல் பெருச்சாளிகள் , அதன் மூலம் தனிநபர் சொத்துக்களை சேர்த்தவர்கள்-முறையாக வரி செலுத்தாத வியாபாரிகள் – முன்னைய அரசில் தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் எடுத்தவர்கள் ஊழியர்களுக்கு சிறு கூலி கொடுத்து உழைப்பை சுரண்டியவர்கள் (கணக்கில் வராத கருப்பு பணம் சேர்த்தவர்கள்) ஊழியர் சேம இலாப தொகையை செலுத்தாத தொழில் தருனர் . அரசின் டெண்டர் முறையில் ஊழல் செய்தவர்கள் – வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்தவர்கள் போன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் திறைசேரியை துரித கதியில் உயர்த்துகின்ற வழிமுறைகளை அரசு செய்ய தவறியுள்ளது, என்று கூறுவதை விட வேண்டுமென்றே தவிர்த்துள்ளமை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன் பெரும் கருவி அரசு என்னும் மார்க்சிய கூற்றை ஏற்க சொல்லறது.

நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க மக்கள் இந்த சுமையை – சகித்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது . எனினும் எந்த ஒரு அரசியல்வாதியோ பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களின் குடும்பமோ – முதலாளிவர்க்கமோ இந்த வரிச்சுமையில் பாதிக்கப்படுவதில்லை, என்ற யதார்த்தத்தை உணரவும் இல்லை, சமூக சமத்துவமற்ற பொருளாதார விளைவுகளை பற்றி சற்றேனும் கவலை கொள்ளவும் இல்லை. “பொருளாதார சரிவில் இருந்த மீட்கவே பதவிக்கு வந்தேன் வேறு மாற்று வழி இல்லை “ என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்த பொருளாதார சீரழிவு காரணமான முன்னைய அரசின் பாராளுமன்ற பெரும்பான்மையில் பதவிக்கு வந்த நிலையில் மேற்கூறிய விடயங்கள் நடைமுறைப்படுத்துவதென்பது பகல் கனவே. சாமானிய மக்களின் எளிய உணவான பானில் தொடங்கி எரிபொருள் என இதுவரை வரி அறவீட்டுக்கு உட்படாத பல – அத்தியவாசிய சேவைகள் மற்றும் பொருட்களின் மீதான வரி முன்பெப்போதும் இல்லாதவகையில் அறவிடப்பட்டுள்ளது.

மனித சமூகங்கள் வர்க்க மோதலின் மூலம் உருவாகின்றன எனவும் உற்பத்திச் சாதனங்களைக் முதலாளித்துவ வர்க்கமே கட்டுப்படுத்தும் அதற்கு ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதரவு நல்கும் எனவும் மாக்சிசம் கூறுகிறது. அதைத்தான் தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செய்து வருகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களுக்கு விலைகளை தீர்மானிக்க முடிவதில்லை அது போல பல் தேசிய கம்பனிகள் நுகர்வோருக்குக்கான பொருட்களின் விலைகள் சேவைகளுக்கு ஏற்ற வகையில் அறவிடுவதில் – அரசின் கொள்கை வெளிப்படைத்தன்மையாக இல்லை. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் – புகையிரத திணைக்களம் என பல அரச நிறுவனங்கள் இத்தனை காலமும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அரசு கூறுகிறது. பொதுமக்கள் எவரும் இலவசமாக பெட்ரோல் பெறவோ – கட்டணம் செலுத்தாமல் புகையிரத பயணம் செய்யவோ இல்லை. எனினும் குறித்த நிறுவனங்கள் நஷ்டமானத்தின் காரணங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை.

இந்நிலையில் குறித்த அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை ஈடு செய்ய மக்களை மாத்திரமே வரிச்சுமையை ஏற்கவைப்பது அரசு முழுக்க முழுக்க முதலாளித்துவ சிந்தனையில் மட்டுமே இயங்குகிறது என்பதை வெளிப்படுத்துகின்றது. 2015 ஆண்டு மத்திய வங்கி ஊழல் குற்றவாளி என ஜனாதிபதி விசாரணை குழுவால் அடையாளப்படுத்தப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் குறித்த வழக்கு இதுவரை முடிவுக்கு வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியின்றி அர்ஜுன மகேந்திரனை CBSL ஆளுநராக நியமித்தார். இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் என்பது 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற நிதிச் சலவை மோசடியாகும் மற்றும் நாட்டிற்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியது. மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பிணை முறி மோசடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2016 ஒக்டோபர் மாதம் கோப் ஆணைக்குழு வெளிப்படுத்தியது சம்பந்தப்பட்ட மத்திய வங்கி மோசடி தொடர்பான விசாரணைகள் ஏன் இதுவரை முடிவுக்கு வரவில்லை அந்த நஷ்டமும் இதுவரை ஈடு செய்யப்படவில்லை, இந்த ஊழல் நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் பொதுமக்களின் பங்கு என்ன ? போன்ற வினாக்களை ஊடகங்கள் கூட ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்பதற்கு தயங்குகின்றன.

சட்டம் நீதி நிர்வாகம் என முத்துறைகளுக்கும் சவால் விடுகின்ற ஜனநாயகத்தின் காவலன் என கூறப்படுகின்ற ஊடகத்துறை கூட முதலாளித்துவ வர்கத்தின் நலன் பேணும் அங்கமாக மாறி வருகின்றமை முதலாளித்துவத்தின் தாற்பரியத்தின் வீரியத்தை எடுத்து காட்டுகிறது. ஏனெனில் உற்பத்தி பொருட்களின் தர நிர்ணயம் குறித்து அரசின் நெகிழ்வு போக்கை விரும்புகின்ற பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் ஊடகங்களுக்கு அளித்து வரும் விளம்பரங்கள் மற்றும் அதன் மூலம் ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் இருப்பு போஷிக்கடுவதும் ஒரு காரணமாகலாம். உற்பத்தியையும் சந்தையையும் தீர்மானிக்கும் பெரும் சக்திகளாக முதலாளித்துவ வர்க்கம் திகழ்வதால் ஆளுவோரும் ஆளப்படுவோரும் அவர்களின் வளமான இருப்புக்கு இசைவான வகையில் ஊடகத்துறையையும் செயல்படுத்தப்படுகின்றமை தேசத்தின் ஜனநாயகத்தின் சுவாசப்பாதையில் காபன்மொனாக்சைட்டை செலுத்துவதற்கு ஒப்பாகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால்மாவை எடுத்து கொண்டால் இயற்கையாய் பாலில் உள்ள அனைத்து வித தாது சத்துக்களும் உறிஞ்சப்பட்டு ஏனைய உப உணவு உற்பத்திகளுக்கு மூலப்பொருளாக பயன்படுத்தபட்டு அவை ஏனைய பாலுற்பத்தி பொருட்களாக சந்தைப்படுத்தப்படுகின்றன.

எஞ்சிக்கின்ற பால் போன்ற திரவம் பல இரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு பால்மாவாக மக்களுக்கு சந்தைப்படுத்தபடுகின்றன. இவை அதிக விலையில் விற்பனை செய்யப்டுகின்றன. இவற்றால் மனித ஆரோக்கியத்துக்கு சிறந்த பலன் உண்டு என எந்த அரசு வைத்திய அதிகரிக்கும் சான்றிதழ் அளிக்க அளிக்க முடியாது. எனினும் பல ஆண்டுகளாய் சிறந்த விளம்பரங்கள் மூலம் எம் மக்கள் உளவியல் ரீதியாக பால்மாவுக்கு அடிமைப்பட்டவர்களாக மூளைச்சலவை செய்யப்பட்டு வருகின்றனர். பால்மாவுக்கான அதிக நுகர்வோரை கொண்ட சந்தை மத்திய தர வகுப்பினரிடையே உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது. இது குறித்து நல்லிண அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன ஒரு செவ்வியில் இவ்வாறு கூறியிருந்தார், தான் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது மக்கள் பாவனைக்கு எடுக்கும் சவர் க்காரத்தில் சேர்க்கப்படும் சிலவகை வேதியியல் இரசாயினங்கள் அளவுகளில் கட்டுப்பாடுகள் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதென்றும் அவை தோல் புற்றுநோயை உண்டு பண்ணும் ஊக்கிகளை கொண்டுள்ளமை தொடர்பிலும் மற்றும் செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட சிறுவர்கள் சொக்கலேட் பாலிலும் செயற்கை இனிப்பு வகையின் அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் உள்ளமை போன்ற விடயங்களை பேச விளைந்த போது இது குறித்து பேச வேண்டாம் என்று குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டதாகவும். மேலும் பல பல்தேசிய நிறுவனங்கள் அவரோடு முரண்பட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.

இவை குறித்த தகவல்களை எந்த ஊடகமும் வெளியிடாமைக்கு காரணம் அவை முதலாளித்துவ வர்க்கத்தால் பிழைப்பு நடத்தும் ஒரு கைபொம்மை ஆகி வருகின்றன. ” விலை ஏற்றப்பட்ட பொருட்களின் விலைகள் மீண்டும் பழைய விலைக்கு திருப்புவது சாத்தியமற்றது எனவே – வருமானத்தை அதிகரித்து கொள்வதே சிறந்த வழி ” என ஆலோசனை கூறும் மத்தியவங்கி ஆளுநர் அதற்குரிய நடைமுறை சாத்தியம் நாட்டில் இல்லை என்பதை அறிவாரா ? அரசு மாற்று வழிகளை மக்களுக்கு வழங்காமல் வருமானத்தை அதிகரித்து கொள்ள முயலவேண்டும் என ஆலோசனை கூறுவது கண்களை பிடுங்கி விட்டு வேகமாய் ஓடச்சொல்வது போல் உள்ளது. நடுத்தர மக்களின் சேமிப்பில் இருந்த ஒரே விடயம் தங்கம் , தங்க ஆபரணங்களை வாங்குவது நடுத்தர மக்களை பொறுத்தமட்டில் ஒரு சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டம் , அது அவர்களின் வாழ்நாள் முதலீடு அதன் மூலம் மக்கள் அவர்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். இனி தங்கம் வாங்குகின்ற மொத்த கொள்வனவு விலைக்கும் 18% வரி அறவிடப்படுவதால் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு திட்டமாக இதுவரை இருந்து வந்த தங்கம் கொள்வனவு செய்கின்ற வாய்ப்பும் கேள்வி குறியாகியுள்ளது.

நாளுக்கு நாள் வறட்சி உற்று வரும் மக்களின் வாழ்வாதரம் , விரக்தியையும் ஆதங்கத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது. பல தார்மீக கேள்விகளுக்கு விடை தெரியாமலே மக்கள் – உளவியல் நோயாளர்களாக மாறிவருன்றனர். தாங்கள் ஏமாற்றப்படுவது அறியாமலே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் சிந்தனை கிரிக்கட் விளையாட்டு, தென்னிந்திய சினிமா அம்சங்கள், இனரீதியிலான அரசியல், சமூக ஊடங்கங்கள் போன்றவற்றின் தாக்கத்தில் மாயையில் சிக்கிக்கொண்டுள்ளது. அறிவார்ந்த சமூகம் புலம் பெயர்ந்து கொண்டு உள்ளது. வாழ்வுக்காக உணவு என்பது கடந்து உணவுக்காக வாழவேண்டிய கட்டத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மனிதாபிமானம் , உதவி செய்யும் மனப்பான்மை , மனிதரை மனிதர் நம்புகின்ற தன்மை அருகி வருகின்றன. மனிதரை மனிதர் சுரண்டி ஏமாற்றி பிழைக்கும் நிலை தீவிரமடைந்துள்ளது. மேலும் மக்களின் வாழ்வாதார பலயீனத்தை பயன்படுத்தி மதமாற்றம் செய்யும் கும்பல் நாடெங்கும் உலாவித்திருக்கிறது. மறுபிறப்பில் நல்ல ஒரு பிறப்பு கிட்டும் என்ற போலி நம்பிக்கையில் சுயமாக உயிரை மாய்த்துக்கொள்கின்ற போலி சித்தாந்தங்களை மதச்சாயம் பூசி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் மதபோதகர்களும் உருவாகி வருகின்றனர். அண்மையில் தொடர்ச்சியாய் நடைபெற்ற ஏழு தற்கொலைகள் குறிப்பிட தக்கது. மற்றுமொரு புறம் வெளிநாடு புலம் பெயர்வுக்கு எத்தனிக்கும் மக்களை ஏமாற்றி தெரியும் போலி முகவர்கள். பிரமிட் முறையில் வியாபரம் செய்து மக்களின் பணத்தை சூறையாடும் திருட்டு கும்பல். வயதானவர்களை மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல். என சட்ட விரோதமாய் சட்டத்தின் பிடிக்கும் சிக்காமல் மக்களை ஏமாற்றி பிழைக்கும் குழுக்கள் நாட்டில் ஏராளம் பெருகி வருகின்றன. போதை பொருள்பொருளுக்கு அடிமையாகி வரும் இளம் சமூகத்தினர் அவர்களை முறையாய் வளர்த்தெடுக்க முடியாத அளவுக்கு பொருளாதார சுமையினை சுமக்கும் மத்தியதர வகுப்பினர். கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி, அதன் ஒற்றுமை , உணர்வுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மரியாதை , சுய ஒழுக்கம் ,கீழ்ப்படிதல் என அவர்களின் சமூகம் சார்ந்த பாரம்பரிய பெறுமானங்களை பல குடும்பங்கள் வேகமாய் இழந்து வருகின்றன .

வெளிநாட்டுக்கு சென்றமையினால் தந்தை அரவணைப்பை இழந்த குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் பெருகி வருகின்றன. பல குடும்பங்களில் தாய் தந்தையோடு ஒன்றாய் மறந்து அமர்ந்து உணவு உட்கொள்ள நேரம் கிட்டாத பிள்ளைகள் கொண்ட குடும்பங்கள் பெருகி வருகின்றன. சுயநல மிக்கதாகவும், உயர்ந்த பண்பாடு மிக்க விழுமியங்களை இழந்து வரும் சமூகமாக இலங்கையின் மத்தியதர சமூகம் மாறி வருகின்றமை சமூக பிறழ்வாகும். கால் மாக்ஸின் கூற்றின் படி நெருக்கடிகள் தீவிரமடைந்து முதலாளித்துவத்தின் கீழ் உள்ள வர்க்க விரோதங்கள் – அதன் உறுதியற்ற தன்மை, நெருக்கடிக்கு ஆளாகும் தன்மை ஆகியவற்றின் காரணமாக – தொழிலாள வர்க்கத்தின் வகுப்பு மனப்பான்மையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் இறுதியில் வர்க்கமற்ற, பொதுவுடைமை சமூகத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கும் சமூக-பொருளாதார விடுதலையைக் கொண்டுவருவதற்கும் தொழிலாளர் வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சிரிக்க மறந்த மனிதர்கள் நாட்டில் பெருகி வருகின்றனர். விரக்தியை சுமந்த மனிதர்களின் மன உளைச்சலின் விளைவு மற்றுமொறு மக்கள் போராட்டத்தை உருவாகிடுமா ? அரசு முதலாளித்துவத்தை மட்டுமே காக்கின்ற கருவி என்பதை மக்கள் உணரும் வரையிலும், சாமானிய மக்களின் இந்த அவலநிலை தொடரும் அதற்கு மக்கள் சிந்திக்க வேண்டும் ! சிந்திப்பார்களா ?

ஆக்கம் இருளப்பன் ஜெகநாதன் சுயாதீன ஊடகவியலாளர்