அணிசேரா நாடுகளின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தயாராக உள்ள இலங்கை ஜனாதிபதி, அதன் கொள்கைகளுக்கு மாறாக செயற்படுவதாக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அல்லது அந்தக் கொள்கைக்கு முரணாக இலங்கை கடற்படையின் ஆதரவை செங்கடலுக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதியின் அணிசேரா கொள்கையை வரவேற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கண்டிக்கும் அவர், இது நாட்டுக்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றார்.
“அணிசேரா கொள்கையோடு இருக்கின்ற நாடு என்றால் அந்த கொள்கையோடு இருக்க வேண்டும். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் நாட்டை பாதிக்கப்போகின்ற ஒரு தீர்மானம்”
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” எனும் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை கடற்படை கப்பலை செங்கடலுக்கு அனுப்பத் தயார் என முதன்முறையாக அறிவித்தார்.
“செங்கடலில் ஹூதி குழுவினர் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதால் கப்பல் போக்குவரத்து செங்கடல் ஊடாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் செங்கடல் ஊடாகப் பயணிக்காமல் தென்னாரிக்காவின் ஊடாக சுற்றிவந்தால் அதன் காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடலுக்கு அனுப்ப உடன்பட்டுள்ளோம்.”
அன்சார் அல்லா என்பது ஹூதி கிளர்ச்சியாளர்களின் உத்தியோகபூர்வ பெயர், இது யேமனில் உள்ள ஷியா முஸ்லிம் சிறுபான்மையினரான சயிட் துணைப்பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழு. தொண்ணூறுகளில் இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் எழுச்சி ஆரம்பமானது.
கடற்படைக் கப்பலை இரண்டு வாரங்களுக்கு செங்கடலில் வைத்திருப்பதற்கு 250 மில்லியனை செலவிட வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
தலைநகரில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய, கடற்படையின் கப்பல்கள் செங்கடல் பகுதிக்கு செல்ல தயாராகி வருவதாகவும், ஆனால் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அணிசேரா கொள்கையை இலங்கை உறுதியாக பேண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தரன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகாண்டாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19வது உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச தலைவர் மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கம்பாலாவில் நடைபெற உள்ளதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.