துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

0
31
Article Top Ad

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை மன்னித்து விடுதலை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்திருந்த தீர்மானத்தை, உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) செல்லுபடியற்றதாக அறிவித்து தீர்ப்பளித்தது.

இதன்படி, துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்ததன் பின்னர், நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என தீர்ப்பை அறிவித்த நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில், மக்களின் நம்பிக்கையை மீறும் வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மனுதாரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்துள்ள உண்மைகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததுடன், துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யுமாறு மேன்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்த ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதில் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் அதன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி, சுமனா பிரேமச்சந்திர, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டின் நலனை கருத்திற்கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில், துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன.

நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.