தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் புலம்பெயர் தமிழர்களும் சரிசமன் பங்காளிகள்

0
53
Article Top Ad

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக இழுபடுகின்றது. அதிலும் கடந்த ஒன்றரை தசாப்த காலம் சற்று வித்தியாசமானது.

தமிழர்களின் உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டம் 2009 இல் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அச்சமயத்தில் அரசியலில் இருந்த தமிழ் தலைவர்களும், அவர்களால் பிற்காலத்தில் அரசியலுக்குக் கொண்டவரப்பட்டவர்களும், கடந்த 15 ஆண்டுகளில் உருப்படியாக எதுவும் செய்யவே இல்லை என்ற ஆதங்கம் – அதிருப்தி – எரிச்சல் – தமிழ் மக்களுக்கு.

அது மாத்திரமல்ல, அந்த தமிழ்த் தலைவர்கள் இன்னொரு விடயத்தையும் புறமொதுக்கி வருகின்றனர். அது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இலங்கையில் இனப் பிரச்சினையில் சிக்கி, தீர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் கணிசமானோர் – முக்கிய பங்காளிகள் – புலம்பெயர்ந்த தமிழர்கள்.

தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையில் மிக முக்கிய பங்குதாரர்கள் அவர்கள் என்ற யதார்த்தத்தை உள்நாட்டில் செயற்படும் நமது தமிழ்த் தலைவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை. அவர்கள் புலம்பெயர்ந்து விட்டவர்கள், தேசிய இனப்பிரச்சினையில் அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்பல்ல என்று நினைக்கின்றார்கள்.

இதுவரை, கடந்த ஒன்றரை கசாப்த காலமாகத் தமிழர் தேசிய தரப்புகளுக்குத் தலைவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட சம்பந்தன் கூட புலம்பெயர் தமிழர்களை இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்பு என்றோ, பிரதான பங்காளர்கள் என்றோ ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களை இப்பிரச்சினையில் பார்வையாளர்கள், முன்னாள் பங்காளிகள் என்ற அந்தஸ்தில் வைத்துக்கொண்டு, தீர்வு முயற்சிகளில் எங்களுக்கு அவர்கள் சொல்லித்தரத் தேவையில்லை என்ற மேலாதிக்கப் போக்கிலேயே அணுகினர் என்பது வெளிப்படையான உண்மை.

ஆனால் அந்த அணுகுமுறை தவறானது. அவர்கள் புலம்பெயர்ந்து சென்றவர்கள் என்றாலும், தமிழர் தாயகத்தின் பிரதான பங்காளிகள். இனப் பிரச்சினையின் ஆழமான, கொடூரப் பக்கங்களே அவர்களை இலங்கை தீவில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பூகோளப் பந்தின் பல்வேறு தேசங்களுக்கும் தூக்கி வீசியது.

அவர்கள் பல்லாயிரம் மைல் களுக்கு அப்பால் வசித்தாலும், எண்ணத்தினாலும் நினைவினாலும், செயல்களினாலும் சதா தமது தாயகத்தைப் பற்றிக் கவலைபப்ட்டுக் கொண்டிருப்பவர்கள்.

அந்தச் சிந்தனையில் உழன்று கொண்டிருப்பவர்கள். ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்தில், இலங்கை அரசின் யுத்த பட்ஜெட்டுகளுக்கு நிகரான பாதீடுகளை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட சக்திகளான விடுதலைப் புலிகளும் முன்னெடுத்தார்கள் என்றால் அதற்குப் பிரதான காரணகர்த்தாக்கள் இந்தப் புலம்பெயர் தேசத்தவர்கள் என்ற நமது உறவுகள்தான்.

நல்லிணக்கத்தில் முதல் அங்கம் இடம்பெயர்ந்தோர் தத்தமது பூர்வீக இடங்களுக்கு மீளுவதாகும். அது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோருக்கும் பொருந்தும்.

ஆகவே எந்தத் தீர்வும் – எந்த இணக்கமும் – புலம்பெயர்ந்தோர் தாமாக விரும்பி நாடு திரும்புவதற்கான உகந்த சூழலையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆகவே எட்டப்படும் எந்தத் தீர்விலும் அவர்களும் சம பங்காளிகளாகவும், உரித்துக்காரர்களாகவும் இருக்க வேண்டும். அது கட்டாயம்.

தலைவர் பிரபாகரனின் கடைசி மாவீரர் தின உரை 2008இல் நிகழ்த்தப்பட்டது. அந்த உரையில், இந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பொறுப்புகளை புலம்பெயர்ந்த நமது மக்களின் இளம் சமுதாயம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தீர்க்கதரிசனமாக எடுத்து ரைத்திருந்தார். அந்தப் புலம்பெயர் இளைஞர் சமுதாயம் இந்த 15 ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோரின் பொறுப்பான தலைமுறையாக உயர்ந்துள்ளது.

எனவே தமிழர் தரப்பில் – தமிழ்த் தேசிய தரப்பில் – தேசிய இனப் பிரச்சினைக்கான முயற்சிகளில் ஈடுபடுவோர், புலம்பெயர் சமூகத்தினர் இந்த விடயத்தில் புறமொதுக்கப்பட முடியாத – சமதையான – பங்காளிகள் என்ற யதார்த்தப் புற உண்மையை ஏற்றுக்கொண்டு, அவர்களையும் ஒரு தரப்பாக ஒன்றிணைத்து, முன்நகர முயற்சிக்க வேண்டும்.

களத்தில் தமிழ்த் தலைமைகள் பிளவுபட்டு நிற்பது போல, புலத்திலும், புலம்பெயர்ந்த இடங்களிலும் அங்குள்ள நமது தலைமைகள் பிளவு பட்டிருக்கலாம். பிளவுபட்டிருக்கின்றார்கள். அதைக் காரணம் காட்டி நாங்கள் அவர்களை விலத்தி, புறமொதுக்கி நடக்க முடியாது. நடக்கக் கூடாது.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், உள்நாட்டு தமிழர்கள் போல புலம்பெயர் தமிழர்களும் சரிசமன் பங்காளிகள். இதைப் புறமொதுக்கி நாம் நடக்க முடியாது. நடக்கக் கூடாது.

சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த யதார்த்தப் புற உண்மையை புறமொதுக்கி நடந்த தங்கள் தப்பை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.