இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும், பௌத்தமத
குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
2018ம் ஆண்டு முதல் குருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விகாரை விவகாரம் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையே பாரிய முறுகல் நிலையை உருவாக்கி தொடர்ந்து வருகிறது.
குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் இராணுவ ஒத்துழைப்புடன் விகாரை அமைக்கும் பணியினை முன்னெடுத்த கல்கமுவ சாந்த போதி தேரர் குறித்த விகாரையின் விகாராதிபதியாக இருந்து குறித்த விடயங்களை முன்னெடுத்தார்.
இராணுவ ஆதரவுடனும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆதரவுடனும் கல்கமுவ சாந்த போதி தேரர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான விகாரை அமைக்கும் பணியினை தொடரும் நிலையில் முரண்பாடுகள் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்த குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தொடர்பில் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ரி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை திறந்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில் குறித்த குருந்தூர் மலை விவகாரமானது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் குறித்த விவகாரமானது வருகிற மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா அமர்வுகளில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் குறித்த விகாரையின் விகாராதிபதியான கல்கமுவ சாந்த போதி தேரர் நீக்கப்பட்டதாகவும் புதிதாக குறித்த விகாரையின் விகாராதிபதியாக சியம்பலகஸ்கல விமலசார தேரர் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இனமத நல்லிணக்கத்தினை மேற்கொள்ளவென வடகிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக அதிபரால் புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த சியம்பலகஸ்கல விமலசார தேரர் தலைமையில், சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் உள்ளிட்ட குழுவினர் மற்றும் குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலர் , பெளத்த மத குருமார்களுக்கிடையில் இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த இரகசிய கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கின்றது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காது இரகசியமான முறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று அவர்களுடன் புகைப்படங்களை எடுத்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களை வெளியே விடமாட்டோம் இது அதிபருக்கு காண்பிக்கவே எனவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது குறித்த விவகாரமானது வருகிற மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா அமர்வுகளில் பேசப்படலாம் என்ற நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்குள்ளவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கிறோம் என்ற பிரச்சாரத்தை ஜெனீவா அமர்வுகளில் முன்னெடுக்கவே என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த சந்திப்பில் இவ்வாறான உள்நோக்கம் ஏதும் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.என குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.