கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வயதான வீரர்.. உலக சாதனை படைத்த இந்தியாவின் ரோகன் போபண்ணா

0
38
Article Top Ad

2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர். அதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றனர்.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா. மேலும் இதுவே ஆடவர் இரட்டையர் பிரிவில் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் தன் 43வது வயதில் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

2024 ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலிய ஜோடியான சைமன் போலேலி – ஆண்ட்ரியா வாவசோரியை சந்தித்தது. கடுமையாக நடந்த போட்டிக்கு பின் 7 – 6 (0) 7 – 5 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது.

ரோகன் போபண்ணா தன் 43வது வயதில் பெற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்களால் பிரமிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. முன்னதாக ரோகன் போபண்ணா 2013 மற்றும் 2023 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தார். அந்த வகையில் இதுவே அவரது முதல் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் வெற்றி ஆகும்.

ஒரே ஒரு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். 2017 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பட்டம் வென்று இருந்தார். அதன் பின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த ரோகன் போபண்ணா அந்த கனவை நனவாக்கி இருக்கிறார். அவரது இணையான மேத்யூ எப்டன் சிறப்பாக ஆடியதும் அவருக்கு கை கொடுத்தது. ரோகன் போபண்ணாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.