எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் முடிவு: இலங்கையில் மீண்டும் வெடிக்கப் போகும் கடுமையான போராட்டங்கள்

0
18
Article Top Ad

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் மூலம் அறிய முடிகிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், சீனாவுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமான உறவை பேணியதுடன், இந்தியாவுடனான உறவுகளிலும் சில முறுகல்களை ஏற்படுத்திக்கொண்டது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேச்சுகள்

என்றாலும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் இந்தியாவுடன் இலங்கை மீண்டும் நெருக்கமான உறவை கட்டியெழுப்பியதுடன், இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுப்படுத்த ETCA எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

எட்கா ஒப்பந்தத்துக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுவான ஆதரவையும் வழங்கினார். ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு எதிரான போராட்டங்களை அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் குற்றம் சாட்டினார்.

கடுமையான போராட்டங்கள் வெடித்தமையால் 2018ஆம் ஆண்டில் எட்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையாக எதிர்த்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர,

‘‘2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டுகிறது. ஆனால், இலங்கையை அதன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வது நியாயமாக இருக்காது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இரு அரசாங்கங்களும் எட்கா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

இந்தப் பேச்சுக்களை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிப்பதற்கு அரசாங்கத் தீர்மானத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முடிவு நாடாளுமன்றக் குழுவில் எந்த மட்டத்திலும் எடுக்கப்படவில்லை அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

ரணிலுக்கு மக்கள் ஆணை இல்லை

எட்கா பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்த கருத்துகள் குறித்து, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பயன்படுத்தி தனது நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி கொண்டுசெல்ல பார்க்கிறார்.

கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காகவே ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார். அதனால் எட்கா தொடர்பான பேச்சுகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை.‘‘ எனவும் சுட்டிக்காட்டினார்.

விரைவில் 13ஆவது சுற்று பேச்சுவார்த்தை

எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட 2016-2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்தம் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 1ஆம் திகதி வரை கொழும்பில் 12 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் FTA (Indo – Sri Lanka Free Trade Agreement) எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

இதேவேளை, எட்கா உடன்படிக்கை தொடர்பில் 13ஆவது சுற்றுப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

எட்கா உடன்படிக்கைகயை கைச்சாத்திடுவதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.