பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய விவசாயிகளை கலைக்க பொலிஸ் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அவர்கள் இந்திய தலைநகருக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி சலோவில் பொலிஸார் கண்ணீர் புகை
ஹரியானா-பஞ்சாப் எல்லை மற்றும் தேசிய தலைநகருக்குள் நுழையும் இடங்களில் பலத்த தடுப்புகளுக்கு மத்தியில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பஞ்சாபிலிருந்து ‘டெல்லி சலோ’ (Delhi Chalo) பேரணியைத் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக டெல்லி செல்லும் வழியில் ஹரியானாவின் அம்பாலா நோக்கிச் சென்றபோது, பஞ்சாப் பொலிஸார் ராஜ்புரா புறவழிச்சாலையைக் கடக்க அனுமதித்தனர்.
எனினும், பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் டிராக் வண்டிகளால் சீமெந்து தடுப்புகளை உடைக்க முயன்றதால் பதற்றம் அதிகரித்தது.
இதனால், பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
போராட்டக்காரர்கள் பலர் கைது
பொலிஸார் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்று எல்லையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்தனர்.
பின்னர் போராட்டக்காரர்களை ஹரியானா பொலிஸார் ஷம்பு எல்லையில் குழப்பத்தின் மத்தியில் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக ஹரியானா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகள்
கடந்த 2020 ஆம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.
ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை மீளப் பெற்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் பஞ்சாபில் இருந்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ அணிவகுப்பை தற்போது தொடங்கி உள்ளனர்.
டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
தேசிய தலைநகரை நோக்கி விவசாயிகள் இன்று அறிவித்துள்ள பேரணியை முன்னிட்டு டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு, நகரின் எல்லைகள் உண்மையான கோட்டைகளாக மாறியுள்ளன.
டெல்லி பொலிஸ் ஆணைாயளர் சஞ்சய் அரோரா, எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி வரை நகரில் பாரிய கூட்டங்களுக்கு தடை விதித்து, பேரணிகள், டிராக்டர் நுழைவு மற்றும் ஆயுதங்கள் அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.