நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்?

0
141
Article Top Ad

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் தீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இலங்கைத் தீவு முழுவதும் அதற்கான பிரசாரத்தை முன்னெடுக்கும் பணியை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்படைத்துள்ளார்.

22 ஆவது திருத்தம் மீது விவாதம்

இதற்கு இடையில், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவால் தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சபை அமர்வில் இந்தத் திருத்தச்சட்டத்தை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தச்சட்டத்துக்கு அடுத்தப்படியாக 23ஆவது திருத்தச்சட்டமே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றிபெற்றால் அடுத்தப்படியாக 23ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்.

அரசியலமைப்பின் 23 ஆவது திருத்தம்

பின்வரும் நோக்கங்களுக்காகவே 23 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றன்.

*ஜனாதிபதி பதவியை நிறுவுதல். அவர் அரசு, அரச நிர்வாகம் மற்றும் ஆயுதப் படைகளின் தலைவராக இருப்பார். (இது பெயரளவானதாக இருக்கும்)

*இரண்டு வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த இரு துணைத் ஜனாதிபதி அலுவலகங்களை நிறுவுதல், அவர்கள் இருவரும் ஜனாதிபதியின் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.

*ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிகள் நாடளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிகளின் பதவிக் காலம் முறையே நான்கு மற்றும் ஆறு ஆண்டுகளாக இருக்கும்.

*ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிகள் பிரதமரின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக சில அதிகாரங்கள் வழங்கப்படும்.

*ஜனாதிபதி நோயுற்றாலோ அல்லது வேறு காரணங்களினாலோ தனது அலுவலகப் பணிகளைச் செய்வதிலிருந்து ஒதுங்கியிருக்கும் சந்தர்ப்பங்களில் அல்லது ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது பிரதமரால் நியமிக்கப்பட்ட ஒரு துணை ஜனாதிபதி அலுவலகத்தில் செயல்படுவார்.

மேற்கண்ட நோக்கங்களுக்காக 23ஆவது அல்லது கொண்டுவரப்படும் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

பொது வாக்கெடுப்பின் ஊடாக அங்கீகாரம் பெற்ற பின்னர் கொண்டுவரப்படும் இத்தகைய திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவது போதுமானதாக இருக்கும்.

தெளிவான சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

ஆனால், உயர் நீதிமன்றம் கடந்த காலத்தில் வழங்கிய வியாக்கியானங்கள் சிலவேளை, இத்தகைய திருத்தச்சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தக் கூடும் என்றும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டில், பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் மற்றும் இரண்டு நீதிபதிகள் குழு, 19ஆவது திருத்தில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயல்பட வேண்டும் என்று முன்வைத்திருந்த சரத்தை நிறைவேற்ற சர்வஜய வாக்கெடுப்பு அவசியம் எனக் கூறியது.

எனவே, நிறைவேற்று அதிகாரத்தின் பின் கொண்டுவரப்படும் திருத்தச்சட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொது வாக்கெடுப்பில் மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படுவது அவசியமாகும் எனவும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்றம் கலைப்பு

மூன்றாவதும் இறுதியுமான படியாக நாடாளுமன்றத்தை கலைத்து, வேட்புமனுக்களை பெறுவதற்கும், வாக்கெடுப்பை நடத்துவதற்கும் திகதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தலும், பொது வாக்கெடுப்பும் ஒரே நாளில் நடத்தப்படலாம்.

தற்போதய ஜனாதிபதி பொதுத் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்பினால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டவுடன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போதைய பிரதமரும் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராக இருக்கலாம் என்பதால், 23ஆவது திருத்தத்திற்கான உத்தேச சட்டமூலம், இடைக்கால ஜனாதிபதியாக எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத பொருத்தமான நபரை நியமிக்க ஜனாதிபதிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு, குடியரசுத் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்கால ஜனாதிபதி பதவியில் இருப்பார்.