காய் நகர்த்தும் இலங்கை அணி: மீண்டுமொரு சாதனையை நிகழ்த்த பக்கா திட்டம்!

0
149
Article Top Ad

நடப்புகிரிக்கெட்உலகில், கிரிக்கெட் அணிகளின் அடுத்தக் குறிக்கோளாக இருப்பது ரி-20 உலகக்கிண்ணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஒன்பதாவது ரி-20 உலகக்கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் ஜூன் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கின்றது, இந்தநிலையில், மற்ற அணிகளைப் போலவே கடந்த ரி-20 உலகக்கிண்ணத் தொடர்களில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பதிவுசெய்த இலங்கை அணியும், உலகக்கிண்ணத்துக்கு மீண்டுமொரு முறை முத்தமிட ஆவலாக உள்ளது.

2009ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி உலகக்கிண்ணத்தை பறிகொடுத்த இலங்கை அணி, 2014ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.

இதன்பிறகுபெரிதளவில்சோபிக்காதஇலங்கைஅணி, இம்முறை எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அணி வீரர்களை வலுப்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெறும் ஒவ்வொரு ரி-20 போட்டியும் இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைய இருக்கின்றது.

நடப்புஆண்டில், முதல் தொடராக, சிம்பாப்வே அணிக்கெதிராக, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடிய இலங்கை அணி, அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டது. எனினும், இந்த தொடரின் போது மிக மோசமான சாதனையொன்றும் பதிவானது. இதுவரை ரி-20 போட்டியில் சிம்பாப்வே அணியிடம் தோல்வியே கண்டிராத இலங்கை அணி, அதுவும் சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியிடம் வீழ்ந்ததே அந்த மோசமான சாதனை.

இந்த தொடரை தொடர்ந்து, தற்போது இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் அணியிடமும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடி, அதனையும் வெற்றிக்கொண்டுள்ளது. முன்னதாக, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயமுறுத்திய ஆப்கானிஸ்தான் அணியை மிக அவதானத்துடன் எதிர்கொண்ட இலங்கை அணி, தொடரை வென்று சாதித்துள்ளது. அடுத்ததாக இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 மற்றும் ஒருநாள் தொடர்கள், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு அடுத்த மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது.

இலங்கை அணி, கட்டம் கட்டமாக அனுபவமில்லாத இளம் வீரர்களை கொண்ட சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகளை எதிர்கொண்டு அணியை வலுப்படுத்துவதாக தெரிகின்றது. எதுவாக இருந்தாலும் இலங்கை அணி, பலம் மிக்க அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளையும் எதிர்கொள்வது அவசியமாகின்றது. காரணம், ரி-20 உலகக்கிண்ணத் தொடர், வேகபந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறுகின்றது. தற்போது இலங்கை போன்ற ஆடுகளங்களில் விளையாடி கிடைக்கும் அனுவங்கள், வேகப்பந்து வீச்சு ஆடுகளங்களில் கைகெடுக்காது.

அத்துடன் காலநிலையும் வீரர்களுக்கு கைக்கூடாது. அத்துடன், ஆசிய ஆடுகளங்கள் மெதுவான ஆடுகளங்கள், அடித்தாடும் வாய்ப்பும் குறைவு. ரி-20 கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட வீரர்களுக்கான விளையாட்டு. ஆகையால், ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக, ‘சேனாஆடுகளங்களில் விளையாடுவது மிக முக்கியமானது. இலங்கை கிரிக்கெட் அணியை பொறுத்தவரை பெத்தும் நிஸங்க, அவிஷ்க பெனார்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, சதீரசமர விக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், ஜனித் லியனகே உள்ளிட்ட மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது. அதேபோல, மகேஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, மதிஷ பத்திரண, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான், கசுன் ராஜித, நூவான் துசார, அகில தனஞ்சய, துனித் வெல்லாலகே, பினுர பெனார்டோ, துஸ்மந்த சமீர உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சு வரிசையும் உள்ளது. குறிப்பாக இம்முறை ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி, சாதிக்க கூடும் என்பதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அவையாவன, தற்போது, அணி சிறந்த நிலையில் உள்ளமை, மேலதிக வீரர்கள் உள்ளமை (பேக்கப் பிளையர்ஸ்), ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் அணி இடம் பெற்றுள்ள குழாம், சமீபத்திய போட்டிகளில் இலங்கை அணியின் வீரர்கள் மிகச் சிறந்த திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

இது உலகக்கிண்ணத் தொடருக்குள் நுழையும் இலங்கை அணிக்கு மிக உத்வேகமாக அமையக் கூடும். இரண்டாவது, கடந்த காலத்தில் இதே வீரர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் பலர் சிறந்த நிலையில் இல்லாமலும், உபாதையாலும் சிக்கித் தவித்து வந்தனர். ஆனால், தற்போது அதுபோன்ற துரதிஷ்டமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆகவே, இது அவர்களை நம்பிக்கைக்குரிய அணியாக இருக்க வழிவகுக்கும். அவ்வாறு உபாதைக்குள்ளாகினால் கூட, சிறந்த மாற்று வீரர்கள் அணியில் உள்ளனர்.

மூன்றாவது, இம்முறை உலகக்கிண்ணத் தொருக்கு நேரடியாக தகுதிபெறாத இலங்கை அணி, தகுதிப் போட்டிகளில் விளையாடி, உலகக்கிண்ணத் தொடரில் விளையாட தகுதிப்பெற்றது. குழு டி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, நெதர்லாந்து, நோபளம், தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்காவை தவிர, ஏனைய அணிகளை இலங்கை அணி, எளிதாக எதிர்கொள்ளும் என்பதை இலங்கை அணியின் அண்மைய பெறுபேறுகள் நிரூபிக்கின்றன. ஆனால், அடுத்த சுற்றுக்கு முன்னேற இலங்கை அணிக்கு வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணி உலகக்கிண்ணத் தொடர் என்றால் மதிப்பிட முடியாது என்பது உலகின் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கருத்துக் கணிப்பாக உள்ளது. அதனை இலங்கை கிரிக்கெட் பல முறை கிரிக்கெட் உலகில் நிரூபித்தும் உள்ளது. ஆகவே இம்முறை மெதுவாக காய் நகர்த்தும் இலங்கை அணி, உலகக்கிண்ணத்துக்கு குறி வைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த காயையும் (சம்பியன் கிண்ணம்) அடித்து வீழ்த்தும் திட்டத்திலும் உள்ளது….

அந்த முயற்சிக்கு குளோபல் தமிழ் சார்பாக மனம்நிறைந்த வாழ்த்துக்கள்……

கட்டுரையாளர் : ஏ.கே.