சிங்களத் தலைவர்கள் நேர்மையற்றவர்கள் – பிரபாகரன் நேர்மையானவர்

0
20
Article Top Ad

“தமிழர் தேசத்தின் மீது பாரிய இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள தேசத்துக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு தமிழர் தேசத்தையும் இன அழிப்பை தடுக்கவுமே பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,

”20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நிர்வாக அரசை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியிருந்தார். அவர் பொருளாதார ரீதியாக தமிழர் தேசத்தை ஸ்திரப்படுத்தியிருந்தார்.

மக்கள் பொருளாதாரத்தின் செழுமையை அனுபவித்ததுடன், ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ்ந்திருந்தனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்திருந்த தருணத்தில் தமிழீழ வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்கங்கள் ஊடாக அதனை புரிந்துக்கொள்ள முடியும்.

நீங்களும் யுத்தம் செய்தீர்கள். உங்களின் இன அழிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள எங்களது தேசமும் யுத்தம் செய்தது. யுத்த சூழல் மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் எங்களது தேசம் பொருளாதார ரீதியில் வளர்ச்சிக்கண்டிருந்தது.

தமிழர் தேசத்துக்கு சமத்துவம் வேண்டும்

யுத்தக்காலத்தில் எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி இல்லாமைக்கு பிரதானமான காரணம் உண்மையும், நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் ஒருவர் எமக்கு இருந்தார். யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளன. சர்வதேசத்திடம் உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுள்ளீர்கள்.

ஆனால், நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளியுள்ளார்கள். உங்களது தலைவர்களிடம் நேர்மையும் அர்ப்பணிப்பும் இல்லை. தீவில் வாழும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் மனப்பான்மை இல்லை. அதனால்தான் இத்தகைய மோசமான நிலையில் இலங்கைத் தீவு உள்ளது.

உங்களுடைய போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்கள் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்.

ஆனால், ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு, தமிழர்கள் சிங்கள தேசம் போன்று சமத்துவமாக வாழக்கூடிய சமஷ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.” என்றார்.