தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரணில் – சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

0
14
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜ்னாதிபதி ரணில் விக்ரமசிங்க முதன் முறையாக மக்களை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் நிலவிவரும் பின்புலத்தில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதில் பொது மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர்.

என்றாலும், பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதியும் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளார்.

ஜனாதிபதி விடுத்த அழைப்பு

அதன்படி, “செபேவ” (யதார்த்தம்) எனும் தொனிப்பொருளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி குளியாப்பிட்டியவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் ரணில் பங்கேற்கிறார்.

”இலங்கை மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது தனியாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்வந்தார்.

விசேடமாக இலங்கை முகம் கொடுத்துள்ள நிலையை கருத்தில் கொண்டு இது அரசியல் செய்வதற்கான காலம் அல்ல, நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று கூட வேண்டும் என ரணில் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பும் விடுத்திருந்தார்.

எனினும், எதிர்க்கட்சியினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இலங்கை முழுமையாக மீளும்

ஜனாதிபதியை வீழ்த்துவதற்கான வேலைத்திட்டங்களையே எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வந்தனர்.” என முன்னாள் கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்கியின் உப தலைவருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாத காலத்திற்குள் 42 புதிய நீதிகளை நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கை முழுமையாக மீளும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆட்சி தன்னுடையதே என ஜனாதிபதி கூறும் கருத்துக்கு, தேர்தல் என ஒன்று நடந்தால் சுனாமி வந்தது போல் இவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மொட்டுக் கட்சியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்புகளை பேணி வருகிறார்.

கலந்துரையாடவே பசில் இலங்கை வந்திருக்கலாம்

மொட்டுக் கட்சியினர் அடுத்த ஆட்சி தங்களுடையது எனக் கூறிக் கொண்டு திரிவதனால் ஜனாதிபதியும் அவ்வாறு தெரிவிக்கிறார் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், பசில் ராஜபக்ச இன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவருடைய இந்த வருகை அரசியல் தரப்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியை தனியாக கொண்டு செல்வதா? அல்லது ரணிலுடன் இணைந்து கொண்டு செல்வதா? என்பது தொடர்பில் கலந்துரையாடவே பசில் ராஜபக்ச இலங்கை வந்திருக்கலாம் என பல கருத்துக்களும் அரசியல் வட்டாரங்களில் எழுந்த வண்ணமே உள்ளன.

பசிலின் இலங்கை வருகையினால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சில தெளிவான முடிவுகள் விரைவில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.