இந்தியாவில் அமுலானது குடியுரிமை திருத்தச்சட்டம்: ஈழத் தமிழர்களை கைவிட்ட மோடி

0
22
Article Top Ad

குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இத்திருந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெளியான அறிவிப்பு

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

என்றாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் சில மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் இதனை அமுல்படுத்தும் அறிவிப்பை இந்திய அரசாங்கம் தாமதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது

சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 திகதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமியர்களையும் இதில் உள்வாங்க வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடந்தன.

ஈழத் தமிழர்களுக்கும் குடியுரிமை மறுப்பு

என்றாலும், இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்களும் இந்த சட்டத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கையில் இருந்து யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கும் இந்த குடியுரைிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியானதுடன், ஈழ அகதிகளுக்கும் குடி உரிமையை வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கத.