இலங்கை, பங்களாதேஷ், வளைகுடா பிராந்திய நாடுகள் உட்பட பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவுடன் ரூபாயில் (INR) வர்த்தகத்தை தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது வணிகங்களுக்கான பரிவர்த்தனை செலவைக் குறைக்க உதவும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சி இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் “மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும்” பரிமாணமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பங்களாதேஷ், இலங்கை ஏற்கனவே எங்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் உள்ளது.
நாங்கள் இந்த நடவடிக்கையினை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். அதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.
மேலும் வளர்ந்த நாடுகளையும் தூர கிழக்கில் உள்ள நாடுகளுடனும் இணைந்து இந் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்துவோம்.
உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகத்தை மேற்கொள்வதால் பல நன்மைகள் உள்ளதை படிப்படியாக ஏனைய நாடுகள் உணர்ந்து வருகின்றன.
இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும், பல நாடுகள் இந்த ஏற்பாட்டிற்கு முன் வந்துள்ளதாகவும், அதற்காக இந்தியாவுடன் பேசி வருவதாகவும், அவர்கள் உள்ளூர் நாணயத்திற்கும் ரூபாய்க்கும் இடையே நேரடி பரிவர்த்தனைகளை தொடங்க விரும்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
ரூபாய் வர்த்தக பொறிமுறையானது ரஷ்யாவுடனான தேசிய நாணயத்தின் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை தனது நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் பட்டியலில் இந்திய ரூபாயை உள்ளடக்கியுள்ளது.
இந்திய ரூபாவை உலகளாவிய நாணயமாக மாற்றும் நோக்கில் ரூபாயில் சர்வதேச வர்த்தக தீர்வை அனுமதிக்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2022 ஜூலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்வை அனுமதிக்க முடிவு செய்தது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட இந்திய வங்கிகள் பங்குதாரர் வர்த்தகம் செய்யும் நாட்டின் வங்கிகளின் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ (Vostro)கணக்குகளைத் திறக்கவும் பராமரிக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்தக் கணக்குகள், வெளிநாட்டு வங்கியின் இருப்புக்களை இந்தியக் கணக்கில் வைத்திருக்கின்றன.
ஒரு இந்திய வர்த்தகர் வெளிநாட்டு வர்த்தகருக்கு ரூபாய்களில் பணம் செலுத்த விரும்பினால், அந்தத் தொகை இந்த வோஸ்ட்ரோ கணக்கில் வரவு வைக்கப்படும்.