ரஷ்யா அணுவாயு போருக்குத் தயார் : மேற்குலகை எச்சரித்த புடின்

0
20
Article Top Ad

”ரஷ்யா அணுசக்தி யுத்தத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பினால் அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாக கருதப்படும்.”

– இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மொஸ்கோவில் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நேர்காணல் வழங்கிய புடின்,

”தனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் அதிகாரம் கிடைக்கும் என்பது உறுதியானது. உக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், இராணுவ – தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்.”என்றார்

ரஷ்யா அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த புடின்,

”ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனில் அமெரிக்கா தமது துருப்புக்களை நிலைநிறுத்தினால் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது.

எனவே, அணுசக்தி மோதல் விரைந்து வருவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், நாங்கள் இதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.

“உக்ரைன் விவகாரத்தில் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.” என்றும் புடின் கூறியுள்ளார்.

அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் அபாயம்

1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் ஆழமான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

உக்ரைனில் போருக்கு துருப்புக்களை அனுப்பினால், மேற்கு நாடுகளுக்கு எதிரான அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக புடின் பலமுறை எச்சரித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைனுடனான போர் ஆரம்பமானது முதல் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை புடின் உக்ரைனுக்குள் அனுப்பியிருந்தார்.

ரஷ்யாவை தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளனர்

இதன் பின்னர் மேற்குலக நாடுகளுடனான உறவில் பல விரிசல்கள் ஏற்பட்டன. அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான சில பொருளாதார தடைகளையும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் விதித்தன.

இதேவேளை, ரஷ்யாவும் அமெரிக்காவும் உலகின் 90% க்கும் அதிகமான அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய அணுசக்தி சக்திகளாக உள்ளன.

இதனால், அணுவாயு போரை மேற்குலக நாடுகள் விரும்பாதென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

என்றாலும், சில மேற்கத்திய தலைவர்கள் உக்ரைன் ஊடாக ரஷ்யாவை தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.