வெடுக்குமாறிமலை விவகாரம் : சபையில் வெடித்தது போராட்டம்

0
43
Article Top Ad

வெடுக்குமாறிமலையில் கடந்த 8ஆம் திகதி வழிபாட்டில் ஈடுபட்ட எட்டு தமிழர்கள் பொய்யான வழக்கின் ஊடாக கைதுசெய்யப்பட்டதாக கூறி கண்டனம் வெளியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வராசா கஜேந்திரன் உட்பட எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபா பீடத்தில் இறங்கி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரால் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது

இதன்போது தமிழ் உறுப்பினர்களை பார்த்து கோரிக்கை விடுத்த பிரதமர் தினேஸ் குணவர்தன,

”ஆசனத்தில் சென்று அமர்ந்து உங்கள் கோரிக்கையை முன்வையுங்கள். ஆசனத்தில் இருந்து கூறினால் பிரதி சபாநாயகர் செவிமடுமார்.” எனக் கட்டளையிட்டார்.

பிரதமரின் கோரிக்கையை அடுத்து ஆசனத்துக்குச் சென்று உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன்,

”கடந்த 8ஆம் திகதி வவுனியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை சிவன் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் தொல்பொருள் திணைக்களத்தாலும், பொலிஸாராலும் பொய்யான வழக்குகள் போடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எட்டுபோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.” என இடித்துரைத்தார்.

பக்கச்சார்பற்ற விசாரணை

இதற்கு அரச தரபை்பில் பதில் அளித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச,

”நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கொன்று தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். அவ்வாறெனின் இந்த வழக்கு தொடர்பிலான விடயங்கள் நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்பட வேண்டியவை.

என்றாலும், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க முடியும். அதன் பின் நீதிமன்றம் நீதியை வழங்கும்” எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நீதிமன்றத்தில் உள்ள வழக்கொன்றின் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு எம்மிடம் கூறுகின்றனர். ஒருபுறம் நாட்டின் சட்டவாட்சியை பாதுகாக்குமாறு கோருகின்றனர் எனவும் வலியுறுத்தினார்.

மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை

இவர்கள் கோருவது போல் அரசாங்கம் வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கினால் நாட்டின் சட்டவாட்சி பாதுகாக்கப்படுமா? வழக்கின் தீர்ப்புகளை நீதிபதிகள்தான் வழங்க வேண்டும். ஆகவே, விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மீண்டும் குறுக்கிட்ட சாள்ஸ் நிர்மலநாதன்,

”வவுனியாவில் ஜெயதிலக என ஒருவர் இருக்கிறார். இவருக்கு எவ்வளவு கூறினாலும் தெரிவதில்லை. பொய்யான வழக்குகளையே போடுகிறார்.” என காரசாரமாக ஆளும் தரப்புக்கு வலியுறுத்தினார்.

இதன்போது குறுக்கிட்டு அரச தரப்பு பக்கம் கை நீட்டி கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

”இனம், மதம், குல பேதங்கள் கடந்து நாட்டில் மதச் சுதந்திரம் இருப்பதாக நாம் அனைவரும் நம்புகிறோம். கருத்துச் சுதந்திரம் உள்ளது. இது அடிப்படை உரிமை என்பதுடன், மனித உரிமையும் ஆகும்” என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

”விகாரையாகவோ, கோயிலாகவோ, தேவாலயமாகவோ அல்லது பள்ளிவாசலோ அனைத்து இடங்களிலும் அந்த மதங்களை பின்பற்றுபவர்களுக்கு சுதந்திரமாக வழிபடும் உரிமையும், மதச் சுதந்திரமும் உள்ளது.

சுயாதீனமான விசாரணை முன்னெடுப்பதாக கூறியுள்ள நீதி அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். இதுகுறித்து சுயாதீன விசாரணை இடம்பெற வேண்டும் என்பதுடன். நீதியை வழங்க வேண்டும். அதேபோன்று மதச் சுதந்திரத்தை பாதுகாக்க 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக நிற்க வேண்டும்.” என அழைப்பும் விடுத்தார்.

தொல்பொருள் சட்டம் ஒரு மதத்துக்கு உரித்துடையது அல்ல

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச,

”எமது நாட்டில் உள்ள தொல்பொருள் சட்டம் ஒரு மதத்துக்கும் ஒரு இனத்துக்கும் உரித்துடையது அல்ல. கடந்த காலங்களில் இந்தச் சட்டத்தின் ஊடாக பௌத்த பிக்குகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” என தமிழ் எம்.பிகளை பார்த்து கூறினார்.

”தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் அதிகளவானவை மத ஸ்தலங்களாகும். காலி கோட்டையில் இருந்த அரச மரக் கன்று ஒன்றை அகற்றினார் என்பதற்காக பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் இந்த சட்டத்தில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது. மேல் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். ஆகவே, இது ஒரு இனத்துக்கு மாத்திரம் உரிய சட்டமாக அடையாளப்படுத்த வேண்டாம்.” எனக் கோரிக்கையும் விடுத்தார்.

வடுனாகலை புனித ஸ்தலமாகவே இது இருந்தது

இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் எழுந்த சாள்ஸ் நிர்மலநாதன்,

”வவுனியா நீதிமன்றத்தில் இந்த இடத்தில் வழிபட முடியும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சார்ந்த இடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எமது தெய்வத்திற்கு நாம் தீங்கை இழைப்போமா?” என ஆளும் தரப்பை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவங்ச,

கி.பி இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு காலம் முதல் பௌத்த தொல்பொருள் சார்ந்த ஒரு இடமாகும் இது. வடுனாகலை புனித ஸ்தலமாகவே இது இருந்தது. தற்போது வெடுக்குநாறி மலை என்கின்றனர். இங்கு சிவன் வழிபாட்டை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வில்லை.” என கடும் தொனியில் கருத்துரைத்தார்.

”மத ரீதியான மோதல்களை உருவாக்கும் நோக்கில் இவர்கள் செயல்பட்டுள்ளனர். அருகில் தேர்தலொன்று வரவுள்ளது. இனவாத மற்றும் மதவாத ரீதியில் தமது வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளவே இவ்வாறு செயல்படுகின்றனர். இதற்கு அடிப்பணிய வேண்டாம்.” என சுட்டிக்காட்டினார்.

சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர ஆளும், எதிர் தரப்புகளுக்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர், நீதி அமைச்சர் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டார்.

என்றாலும் மீண்டும் குறுக்கிட்ட சாணக்கியன்,

”வெடுக்குநாறிமலையில் இந்து மற்றும் ஏனைய மதத்தவர்களுக்கு மத வழிபாடுகளில் ஈடுபட தடையில்லை என நீதிமன்றத் தீர்ப்பொன்று இருந்தது.

விமலுக்கு இம்முறை வாக்கு கேட்பதற்கு இடம் இல்லை

குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் வழிபட சென்றவர்களை கைதுசெய்துள்ளமைதான் இங்கு பிரச்சினை. இவர் கூறுவது போன்று இங்கு வேறு பிரச்சினை இல்லை.” விமல் வீரவங்சவை பார்த்து ஆக்ரோஷமாக வலியுறுத்தினார்.

தொல்பொருள் சொத்துகளுக்கு பதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் கூறியுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகூட இவ்வாறு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தின் சிலரின் தேவைக்கு போடப்பட்ட வழக்கே இதுவென அவர்கள் கூறியுள்ளனர்.

இனவாதம் பேசுபவர்களை வடக்கு, கிழக்கில் அல்ல வெறுத்துள்ளனர். விமல் போன்றவர்களுக்கு இம்முறை வாக்கு கேட்பதற்கு ஒரு இடம் இல்லை. விமல் போ

ன்ற இனவாதிகளை இலங்கையில் இருந்து அகற்றியுள்ளமையால்தான் இவ்வாறு கொந்தளிப்பதாகவும் இடித்துரைத்தார்.

மோசமான மதவாத அரசியலை நிறுத்துங்கள்

சாணக்கியனுக்கு பதில் அளிக்க மீண்டும் குறுக்கிட்ட விமல் வீரவங்ச,

”சாணக்கியன் கூறியது முற்றிலும் பொய்யான விடயங்கள். பொலிஸார்தான் நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மாலை 6 மணிவரைதான் வழிபட முடியும். அதன் பின்னர் முடியாது.

ஆனால், இவர்கள் மாலை 6 மணியின் பின்னரும் வழிபட சென்றுள்ளனர். இதனால்தான் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தேர்தலொன்று வரவுள்ளதால் மோதல்களை ஏற்படுத்தி தமக்கு சாதகத்தை ஏற்படுத்திக்கொள்ள இவர்கள் முற்படுகின்றனர். இந்த குறுகிய மோசமான மதவாத அரசியலை தற்போதாவது நிறுத்துங்கள்.” எனக் சுட்டிக்காட்டியதுடன், சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர சபாநாயகர் மாற்று விடயமொன்றை நோக்கி சபையின் கவனத்தை திருப்பினார்.