நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்

0
18
Article Top Ad

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் ஊடாக கட்சியின் செல்வாக்கை ஓரளவுக்கேனும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என பசில் ராஜபக்ச, கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாட்களாக கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இரண்டு செயல்பாட்டு மையங்களை கட்சியின் தலைமையகத்தில் அமைக்கவும் பசில் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில், பொதுத் தேர்தலை முதல் நடத்தப்படுவதையே தமது கட்சி விரும்புவதாகவும் பசில் வலியுறுத்தியிருந்தார்.

அரச அதிகாரத்துடன் தேர்தலுக்குச் சென்றால் சிறிய நன்மை கிடைக்கும்

இந்த நிலையில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் உரையாற்றுகையில்,

”நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தி தோற்கப்போவதாக அறிந்தும் ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதிக்கு தேர்தலை நடத்துமாறு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதால் ​​அதன் பின்னர் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் வாக்குகள் குறையும்.

அரச அதிகாரத்துடன் தேர்தலுக்குச் செல்லும் கட்சிக்குத் தேர்தலில் சிறிய நன்மை கிடைக்கும். இப்போது அரசின் அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. அரசு இயந்திரங்கள், அரசு ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக கையாளப்படலாம்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தோற்று பொதுத் தேர்தலுக்குச் சென்றால் அவர்களுக்கு அந்த நன்மை கிடைக்காது. தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தே ஐ.தே.க.வும் பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தோல்வியடைந்தவுடன் வெற்றி பெறும் கட்சியின் பிரதமரே நாட்டை ஆளுவார்.

அதனால் கிடைத்துள்ள ஜனாதிபதி பதவி காலத்தை குறைக்கும் வகையில் ரணில் செயற்படுவார் என நான் நினைக்கவில்லை.” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.