மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்

0
19
Article Top Ad

2024ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது.

இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.

டென்மார்க், ஐஸ்லாந்து 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பிடிக்க, ஸ்வீடன் 4-வது இடத்தில் உள்ளது. இஸ்ரேல் 5-வது இடத்தில் இருக்கிறது.

143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை (143-வது இடம்) பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான். அங்கு கடந்த 2020ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த அறிக்கையில் முதன்முறையாக அமெரிக்காவும், ஜெர்மனியும் டாப் 20 பட்டியலில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 23-ஆம் இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும் இருக்கின்றன. மாறாக கோஸ்டாரிகா, குவைத் போன்ற நாடுகள் டாப் 20 பட்டியலுக்கு முன்னேறியுள்ளன. குவைத் 12-வது இடத்திலும், கோஸ்டாரிக்கா 13-வது இடத்திலும் உள்ளன.

மகிழ்ச்சி அளவுகோலில் 2006 – 10 காலக்கட்டத்துக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான், லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, பல்கேரியா, லாட்வியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

எப்படிக் கணக்கிடப்படுகிறது? – மகிழ்ச்சியான நாடுகள் என்று வரையறுக்க சில காரணிகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. மக்கள் தங்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள திருப்தி, ஜிடிபி வருவாய், சமூக ஒத்துழைப்பு, வாழ்நாள், சுதந்திரம், ஊழலின்மை, தாராள மனப்பான்மை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலில் தரவரிசை வழங்கப்படுகிறது. டாப் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

1. ஃபின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. ஸ்வீடன்
5. இஸ்ரேல்
6. நெதர்லாந்து
7. நார்வே
8. லக்ஸம்பெர்க்
9. ஸ்விட்ர்சர்லாந்து
10. ஆஸ்திரேலியா

ஃபின்லாந்து நாடு முதலிடம் பிடித்திருப்பது பற்றி அந்நாட்டின் ஹெல்ஸின்கி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜெனிஃபர் டி பாலோ கூறுகையில், “ஃபின்லாந்து நாட்டு மக்கள் இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பு கொண்டவர்களாவர். அவர்கள் வேலை – வாழ்க்கை சமநிலையை அறிந்து செயல்படுகின்றனர். அதன் தாக்கம் அவர்களின் வாழ்க்கை மீதான திருப்தியில் வெளிப்படுகிறது.

ஃபின்லாந்து மக்கள் வெற்றிகரமான வாழ்க்கை என்பதற்கான அளவுகோலை நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு வகுக்கின்றனர். ஆனால் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் வெற்றிகரமான வாழ்க்கை செல்வச் செழிப்பை மட்டுமே வைத்து அளவிடப்படுகிறது.

அது மட்டுமல்லாது, அரசாங்க அமைப்புகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மிகவும் குறைந்த அளவிலான ஊழல், அனைவருக்கும் இலவசமான கல்வி, சுகாதாரம், வலுவான சமூகநலக் கட்டமைப்பு ஆகியன ஃபின்லாந்து மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்குக் காரணம்” என்றார்.

அதேபோல் 2024 – மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் அறிக்கையில் வயதானவர்களைவிட இளம்வயதினர் அதிகமானோர் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது பரவலாக உலகம் முழுமைக்குமான போக்காக இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

வட அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 30 வயதுக்குக் குறைவானோரின் மகிழ்ச்சி 2006 முதல் 2010 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. அங்கு இளம் வயதினரைவிட வயதானோர் தாங்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பரவலாக அனைத்து வயதினருமே இதே காலகட்டத்தில் (2006 முதல் 2010 ஆண்டு வரை) மகிழ்ச்சியுடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.