ஸ்பெயின் பிரதமர் பயணித்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது: அவசரமாக தரையிறக்கம்

0
100
Article Top Ad

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.

அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார்.

இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.

ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.